×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ரூ.300 உட்பட சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

இலவச தரிசனத்திலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று முதல் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டோக்கன் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் நேற்று முதல் வழங்கப்பட்டது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். இதேபோல், இலவச தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஒருநாள் முன்னதாக டிக்கெட் பெற்று, மறுநாள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பார்வேட்டை உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் மற்றும் நவராத்திரி பிரமோற்சவம் முடிந்த மறுநாள் மலையப்ப சுவாமி வேட்டைக்கு செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கி, 24ம்தேதியுடன் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மலையப்ப சுவாமி சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடன் கோயில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். வழக்கமாக பார்வேட்டை உற்சவம் பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் வனப்பகுதியையொட்டி நடக்கும். ஆனால், கொரோனா காரணமாக கல்யாண மண்டபத்தில் வனப்பகுதியை போன்று செயற்கை வனம் அமைத்து பார்வேட்டை உற்சவம் நடந்தது. பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

* ரூ.300க்கான தரிசன டிக்கெட்
ஏழுமலையான் கோயிலில் வருகிற 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினமும் 16 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டிக்கெட்களை இன்று காலை 11 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devotees ,darshan ,Tirupati Ezhumalayan Temple , Devotees are allowed free darshan at the Tirupati Ezhumalayan Temple from today
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...