×

71 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு பீகாரில் முதல் கட்ட பிரசாரம் ஓய்ந்தது

பாட்னா: பீகாரில் நாளை நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 71 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அங்கு முதல் கட்டமாக 71 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 2வது கட்டமாக நவம்பர் 3ம் தேதி 94, 3வது கட்டமாக நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடுகிறது. மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி அமைத்துள்ளது.

இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வேட்பாளர்களின் தீவிர தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தொடங்கி, நவம்பர் 7ம் தேதி இறுதி கட்ட தேர்தல் முடியும் வரை வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

எப்படிப்பட்ட வேட்பாளர்கள்?
* முதற்கட்ட தேர்தலில் 71 எம்எல்ஏ பதவிக்கு 1,066 பேர் போட்டியிடுகின்றனர்.
* இவர்களில் 328 பேர் அதாவது 31 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* 244 பேர் அதாவது 23 சதவீதத்தினர் கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
* மூன்று வேட்பாளர்களுக்கு எதிராக பலாத்கார வழக்குகளும், 26 பேர் மீது பெண்களுக்கு எதிரான பிற குற்ற வழக்குகளும், 83 பேர் மீது கொலை முயற்சி, கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன.

Tags : phase ,constituencies ,Bihar , The first phase of the campaign in 71 constituencies will end tomorrow in Bihar
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...