குலசேகரன்பட்டினம் தசரா விழா: இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான  மகிஷா சூரசம்ஹாரம் முதன்முறையாக கோயில் பிரகாரத்தில் இன்று நள்ளிரவு நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17ம்தேதி காலை பக்தர்கள் யாருமின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (26ம்தேதி) நள்ளிரவு நடக்கிறது. நாளை (27ம்தேதி) காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2ம்நாள் திருவிழா முதல் 9ம் நாள் திருவிழா வரை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பதிவு செய்து நாள்தோறும் 8000 பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்து திருக்காப்புகள் வழங்கப்பட்டு வந்தன. தசரா திருவிழாவையாட்டி நாள்தோறும் அம்மன் வெவ்வேறு சப்பரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  1ம் திருநாளில் துர்க்கை, 2ம் திருநாளில் விஸ்வகர்மா, 3ம்நாள் திருநாளில் பார்வதி, 4ம்நாள் திருநாளில் பாலசுப்ரமணியம், 5ம் திருநாளில் நவநீதகிருஷ்ணன், 6ம் திருநாளில் மகிசாசுரமர்த்தினி,  7ம் திருநாளில் ஆனந்த நடராஜர், 8ம்திருநாளில் அலைமகள், 9ம் நாளில் கலைமகள் திருக்கோலத்திலும் உள்திரு வீதியுலா நடந்தது.

அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையிலும் கிராமப்புற பகுதிகளில் ஏராளமானவர்கள் தசரா குழுக்கள் அமைத்து வீதி, வீதியாக ஆட்டம் பாட்டத்துடன் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். விரதமிருந்து  வேடமணிந்த பக்தர்கள் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். தசரா திருவிழாவையொட்டி கிராமப்புறங்களில் ஒவ்வொரு பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இன்று நள்ளிரவு நடைபெறும் மகிஷா சுரசம்காரம் வழக்கமாக சிதம்பரேஸ்வரர் கடற்கரை பகுதியில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக முதன்முறையாக திருக்கோயில் பிரகாரம் வளாகத்தில் வைத்து நடக்கிறது. இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் நாளை 27ம்தேதி மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்து பக்தர்கள் காப்பு களைவது வழக்கம். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் செல்ல தடை

இன்றும், நாளையும் குலசேகரன்பட்டனத்திற்கு பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர், மணப்பாடு என குலசேகரப்பட்டினம் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.   தசரா பக்தர்கள், வேடிக்கை பார்க்க பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தசரா வேடம் அணிந்தவர்கள், பக்தர்கள் என யாரும் குலசேகரன்பட்டினத்தில் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டிணம் ஊருக்குள் செல்லும் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரைக்கும் செல்ல முடியாது

கோயில் வளாகத்திலேயே இந்த ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெறுவதால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி  மற்றும் பிரபல தொலைக்காட்சிகள் மற்றும்  யூடிப்பிலும் நேரடியாக ஒளிப்பரப்பபடும். இதை மீறி  வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து இன்றும், நாளையும் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என எஸ்.பி. ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 17 டிஎஸ்பி காவல்,  52 இன்ஸ்பெக்டர்கள், 182 சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 1357 போலீசார், ஊர் காவல்படையினர், 4 தமிழ்நாடு சிறப்புக்காவல் படை அணியினர் அடங்கிய 1610 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>