முத்துமாரியம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜை: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்பு

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் 150 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். கோவிலில் விஜயதசமியன்று மகர நோன்பு உற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வருடா வருடம் நடைபெறும். விழாவில் சிலம்பாட்டம், வாணவேடிக்கை, சிறப்பு மேளதாள வாத்தியங்கள், மண்டகப்படி நிகழ்ச்சிகள், சுவாமி நகர் வலம் வரும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். கொரோனா காரணத்தினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எளிமையான முறையில் நடைபெற்றது. நவராத்திரி விழா கடந்த 10 தினங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டு, கொலுவைக்கப்பட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்த விழாவில் மகர நோன்பு உற்சவ விழா வருடா வருடம் சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம்.

நேற்று சரஸ்வதி பூஜையன்று மதியம் 1.30 மணிக்கு மேல் தசமி திதி துவங்கி இன்று திங்கள்கிழமை மதியம் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று மாலையில் மகர நோன்பு உற்சவ விழா நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து, சுவாமி முருகன் ஊர்வலமாக புறப்பட்டு, மகர நோன்பு திடலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  சரஸ்வதி பூஜையும், விஜயதசமி விழாவும் ஒரே நாளில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமென்று விழாக்குழுவினர் கூறினர். நிகழ்ச்சியில் க்ஷத்திரிய நாடார் உறவின்முறை நாளது முறைகாரர் யாதவன், அம்பலகாரர் சக்திவேல் மற்றும் உறவின்முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: