×

மருத்துவ இடங்களில் இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி..!! அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவித  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். இந்நிலையில் இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. பாஜகவுடன் அதிமுக கைகோர்த்து பட்டியலின மாணவர்களின் கனவை கலைத்துள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ;

மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கண்டனத்திற்குரியது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்;

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி;

அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம்.  பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்.

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது எனவும், தீர்வு காண பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : places ,Supreme Court ,party ,leaders , No OBC reservation in medical places this year: Supreme Court takes action .. !! Comment by political party leaders
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...