×

வந்துச்சா... வரலையா... என்பதை கண்டறிய கொரோனா பாதிக்காத தெருக்களில் ‘ஐஜிஜி’ ரத்த பரிசோதனை தொடக்கம்: முதற்கட்டமாக 30 பேரின் மாதிரிகள் சேகரிப்பு

நெல்லை: நெல்லை மாநகரில் கொரோனா பாதிக்காத தெருக்களில் வசிப்பவர்களிடம் ஐஜிஜி ரத்த பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள், தொற்றுக்கு பாதிக்கப்பட்டனரா, இல்லையா என்பது தெரிய வரும்.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசின் தாக்கம் இறங்குமுகமாக உள்ளது. நாள்தோறும் 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 4 ஆயிரத்திற்குள் இருக்கிறது. இந்நிலையில், இதுவரை 100 சதவீதம் தொற்று  பாதிக்கப்படாத இடங்களை கண்டறிந்து அங்கு வசிக்கும் நபர்களுக்கு ஐஜிஜி (இம்யூனோ குளோபுளின் ஆன்டிஜன்) ரத்த பரிசோதனை செய்யும் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

குருதிசார் தொற்று பகுப்பாய்வு திட்டமான இதில், சம்பந்தப்பட்ட நபருக்கு பரிசோதனை முடிவில் ஐஜிஜி பாசிட்டிவ் என வந்தால் அவருக்கு கொரோனா தொற்று வந்து சென்றிருப்பது உறுதியாகும். அது அந்நபருக்கே தெரியாமல்  இருந்திருக்கலாம். நெகட்டிவ் என வந்தால் கொரோனா அவரை இதுவரை பாதிக்கவில்லை என தெரிய வரும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் அனைவருக்குமே நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால், அப்பகுதி ‘ரிஸ்க் ஏரியா’ என கருத்தில் கொள்ளப்படும்.  அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு உரிய எச்சரிக்கை அறிவுரைகளும் வழங்கப்படும் என மருத்துவ வட்டாரங்கள்  தெரிவித்தன.

இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டையில் உள்ள தாயுமானவர் சந்து தெருவில் 25 வீடுகளில் உள்ள 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. முதியவர்கள், நடுத்தர வயதினர். சிறார்கள் என பிரிக்கப்பட்டு 30 பேரிடம்  மட்டும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட ரத்த மாதரிகள், நெல்லையில் உள்ள இசட் லேப் என்ற சிறப்பு பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் முழுவதும் உள்ள இதுவரை 100 சதவீதம் கொரோனா பாதிப்பு ஏற்படாத ெதருக்கள்  கணக்கெடுக்கப்பட்டு அங்குள்ளவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை நடத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.Tags : IGG ,blood test ,streets , ‘IGG’ blood test begins on corona unaffected streets to find out if it is history
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்