×

கொரோனா அச்சுறுத்தல் குறையும் நிலையில் களை கட்டும் தீபாவளி கொண்டாட்ட வணிகம்: கடைகள் கூடுதல் நேரம் திறக்க அனுமதிக்கப்படுமா?

நெல்லை: கொரோனா அச்சுறுத்தல் குறைந்துவரும் நிலையில் நெல்லையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இதனால் வணிக நிறுவனங்களை கூடுதல் நேரம்  திறக்க அனுமதிக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போதும் நீடிக்கிறது. 209 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்து 87 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளர்.  அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 10 ஆயிரத்து 642 பேர் கடந்த ஞாயிறு வரை உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 900ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் இறங்குமுகமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீப  நாட்களாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 20 ஆகவும் சில நாட்கள் ஒற்றை இலக்கங்களிலும் உள்ளன. இதனால் பொதுமக்களும் சுகாதாரத்துறையினரும் ஆறுதல் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி குறைந்து வருவது சுகாதாரத்துறையினருக்கு கவலை அளிக்கிறது. தற்போது தசரா பண்டிகை நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. கொரோனா  அச்சத்தில் இருந்து மீண்டுவரும் மக்கள் தீபாவளிக்கான கொள்முதல்களை தொடங்கி விட்டனர். இதனால் மாநகர பகுதிகளில் வாகன நெரிசல், வர்த்தக மையங்களில் கூட்டம் போன்றவை அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கையை பின்பற்றுகின்றன. தங்களைத்தேடி வரும் வாடிக்கையாளர்கள் பெயர் விபரம், தொலைபேசி எண் குறித்துக் கொள்ளப்படுகிறது. முககவசம் அணிவது கைகளை  சுத்தப்படுத்துவது போன்ற அறிவுரைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கின்றனர். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுகின்றனர். அடுத்து வரும் 3 வாரங்களில் இந்த நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக விடுமுறை  நாட்களில் அதிகளவில் வெளியூர் மக்களும் ஒரே பகுதியில் திரள வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் இப்போதே கண்காணிப்பது அவசியம் ஆகும்.

கேரளா தந்த பாடம்

தீபாவளி கொள்முதலுக்கான கூட்ட நெரிசலை தவிர்க்க வர்த்தக நிறுவனங்களை அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகைக்கு உள்மாவட்டம் மட்டுமின்றி  வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது அவசியம் என  சமூகஆர்வலர்களும், வர்த்தகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. எனவே அதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கவும், தற்போது குறையும் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தவும் தீபாவளி வரை  மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

Tags : Diwali Celebration Business , Weeding Diwali Celebration Business as Corona Threat Decreases: Will Shops Be Allowed to Open Overtime?
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...