×

அகோலா மாவட்டத்தில் 200 ஆண்டுகளாக ராவணனை வழிபடும் கிராம மக்கள்: தசரா அன்று விழா

அகோலா: நாடு முழுவதும் ராவணனின் கொடும்பாவியை எரித்து மக்கள் தசரா விழாவை கொண்டாடும் அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் ராவணனை வழிபடுகிறார்கள். தசரா அன்று  அவர்கள் ராவணனுக்கு விழை எடுக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ளது சங்கோலா என்ற கிராமம். இங்கு வாழும் மக்கள்தான் ராவணனை வழிபடுகிறார்கள். இந்த கிராமத்தில் 10 தலைகளுடனும் 20 கைகளுடனும் கல்லில் செய்யப்பட்ட ராவணன் சிலை  உள்ளது. இந்த கிராம மக்கள் ராமரையும் வழிபடுகிறார்கள். ஆனால் ராவணனின் கொடும்பாவியை எரிப்பதில்லை.

 ராவணன் அரசியல் காரணத்துக்காகவே சீதையை கடத்திச் சென்றதாக இந்த கிராம மக்கள் நம்புகிறார்கள். ராவணன் புத்திசாலி. மேலும் உடல் இன்பத்தை துறந்து வாழ்ந்த துறவி என்றும் இந்த கிராம மக்கள் கருதுகிறார்கள். இத்தகைய  உயர்ந்த பண்புகளுக்காக அவர்கள் ராவணனை பெரிதும் மதிப்பதாக கோயிலின் பூசாரியான ஹரிபாபு லக்டே தெரிவித்தார். கடந்த 200 ஆண்டுகளாக இவர்கள் ராவணனை வழிபட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். ராவணனை தங்கள்  குடும்பம் நீண்டகாலமாக வழிபட்டு வருவதாகவும், இதனால் அந்த கிராமத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுவதாகவும் பூசாரி கூறினார்.

 ராவணன் பெரிய அறிவாளி என்று கிராமத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் கூறினர். அரசியல் காரணத்துக்காகவே ராவணன் சீதையை கடத்தியதாகவும் அவன் சீதையின் புனிததன்மையை காப்பாற்றியவன் என்றும் முகுந்த் போரே என்பவர்  தெரிவித்தார். தசரா அன்றைக்கு நாடு முழுவதும் ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படும். ஆனால் அதே நாளில் ராவணனின் சிலையை தரிசிக்க  நாடு முழுவதில் இருந்தும் மக்கள் சங்கோலா கிராமத்துக்கு வருகை தருவார்கள் என்றும்  முகுந்த் போரே தெரிவித்தார். பலர் ராவணனை வழிபடுவார்கள் என்றும் அவர் கூறினார். கொரோனா காரணமாக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக விழா நடந்தது.

Tags : Akola district: Festival on Dussehra , Villagers who have been worshiping Ravana for 200 years in Akola district: Festival on Dussehra
× RELATED ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்