தசரா பேரணியில் உரை: முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்: பாரதிய ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

மும்பை: ``முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’’ என்று பாரதிய ஜனதாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார். சிவசேனாவை 1966ம் ஆண்டு தொடங்கிய தலைவர் பால்தாக்கரே, மரணம்அடையும்  வரை அதன் தலைவராக இருந்தார். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டு தசாரா தினத்தில் அவர் தாதரில் உள்ள சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பேரணியில் உரை நிகழ்த்துவார். பால்தாக்கரேயின் மறைவுக்கு பின் சிவசேனா கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற அவருடைய மகன் உத்தவ் தாக்கரே தசரா தினத்தன்று பேரணியில் உரை நிகழ்த்தி வருகிறார்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பேரணி நேற்று சிவாஜி பார்க் எதிரில் உள்ள சுவந்திரியவீர் வீர்சாவக்கர் மண்டபத்தில் நடந்தது. இதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி 11 மாதங்களுக்கு முன் ஆட்சியை பிடித்தது. முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என்று பாரதிய ஜனதாவுக்கு சவால் விடுகிறேன். எதிர்க்கட்சி ஆட்சிகள் பற்றி அக்கறை செலுத்தாமல் பா. ஜனதா நாட்டு விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எங்கள் இந்துத்துவ கொள்கை பற்றி பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் வால்களை மறைத்துக்கொண்டனர்.  ஜிஎஸ்.டிதோல்வியடைந்துவிட்டதால் அதை கைவிட்டு பழைய வரி  திட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு பீகார் மக்களுக்கு இலவச கொரோனா ஊசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அப்படியானால், மற்ற மாநிலத்தவர்கள் வங்கதேசம், கஜகஸ்தானில் இருந்து வந்தவர்களா? இவ்வாறு தாக்கரே  பேசினார்.

Related Stories:

>