×

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு 32 வீரர்கள் அடங்கிய மெகா அணி!: கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

மும்பை: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, 32 வீரர்கள் அடங்கிய மெகா இந்திய அணியை தேர்வு செய்யுமாறு கிரிக்கெட் வாரியம் தேர்வுக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் முடிந்த பின்னர், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கி 2021 ஜனவரி வரை நடைபெற உள்ள இந்த சுற்றுப்ப்யணத்தில் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் மொத்தம் 32 வீரர்களை தேர்வு செய்யுமாறு தேர்வுக் குழுவினருக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தொடரின் இடையே யாருக்காவது தொற்று அல்லது காயம் ஏற்பட்டு விலக நேரிட்டால், மாற்று வீரரை உடனடியாக அனுப்புவது கடினம் என்பதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வகை போட்டிக்குமான ஸ்பெஷலிஸ்ட் வீரர்களும் இந்த மெகா அணியில் இடம் பெறுவார்கள். இவர்களுடன் அணி நிர்வாகிகள், உதவியாளர்கள் என்று மிகப் பெரிய குழுவினர் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். எனினும், வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை. ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா இல்லாத ‘பயோ பபுள்’ சூழலை பராமரிப்பது என கடுமையான சவால்கள் காத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானங்களிலேயே நடைபெற உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் சிட்னி, கான்பெராவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்னில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால், அங்கு போட்டிகள் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இளஞ்சிவப்பு பந்துடன் பகல்/இரவு டெஸ்ட் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிரச்னைகள் அதிகம் இருந்தாலும், பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர்களை பார்க்க உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.Tags : team ,tour ,consultation ,Australia ,Cricket Board , Mega team with 32 players for Australia tour !: Cricket Board consultation
× RELATED வங்கதேச டூருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வெஸ்ட் இண்டீஸ் குழு ஆய்வு