மாநில சட்டமன்ற மேலவையில் 12 காலி இடங்களுக்கு உறுப்பினர் பட்டியல் தயாராகிறது: கவர்னரிடம் நாளை மறுநாள் வழங்க திட்டம்

மும்பை: மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 12 மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் (எம்எல்சி) நியமனத்துக்காக பரிந்துரைக்க  பெயர் பட்டியலை வரும் புதன் கிழமை இறுதி செய்து, அன்றைய தினமே கவர்னர் கோஷ்யாரியிடம் மாநில அரசு ஒப்படைக்க உள்ளது. இந்த பட்டியலை கவர்னர் அப்படியே ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற மேலவைகள் இந்தியாவில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் உள்ளன. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 78. இதில் தற்போது 12 இடங்கள் காலியாக உள்ளன.

 அரசியல் அமைப்புச் சட்டத்தின் 171 வது பிரிவின் படி, மகாராஷ்டிரா சட்டமேலவைக்கு 12  உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இந்த 12 பேரின்  பெயர்களையும் மாநில அரசு தயாரித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும்.  கவர்னர் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு 12 பேரையும் மேலவை உறுப்பினர்களாக  நியமிக்கலாம். அல்லது பெயர் பட்டியலில் சில மாற்றம் செய்து மாநில அரசின்  பார்வைக்கு அனுப்பலாம். அல்லது பெயர் பட்டியலை முழுமையாக நிராகரித்துவிட்டு  புதியவர்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு கூறலாம். கலை, இலக்கியம்,  விஞ்ஞானம், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை போன்ற துறைகளில் போதிய அனுபவும்  அறிவும் உள்ளவர்கள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி, அந்த  மாநில முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் சட்ட மன்ற உறுப்பினராகவோ  அல்லது மேலவை உறுப்பினராகவோ இல்லை. அரசியல் சட்ட விதிகளின்படி அவர்  மகாராஷ்டிர சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக 6 மாதங்களுக்குள்,  அதாவது, மே 27க்குள் தேர்வாக வேண்டும். இதன்பிறகு, கடந்த மே மாதம் 18ம் தேதி  சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டமேலைவையில் ஜூன் மாதமே, 12 நியமன உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் புதிய உறுப்பினர் பட்டியலை தயாரித்து அனுப்ப மாநில அரசு தவறிவிட்டது. மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுதான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், 12 நியமன உறுப்பினர்களின் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த நிலையில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

 இதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவேசேனா கட்சிகள் சார்பில் தலா 4 பேர் சட்டமேலவைக்கு நியமிக்கப்படுவார்கள். இவர்களின் பெயர் பட்டியல் புதன் கிழமைக்குள் இறுதி செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஆளும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் இடையே, அரசு அனுப்பும் 12 பேரின் பெயர் பட்டியலை கவர்னர் ஏற்றுக்கொள்வார் என உறுதியாக கூற முடியாது என சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசிவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். கவர்ன ஏதாவது குற்றம் கண்டுபிடித்து மாநில அரசு வழங்கும், 12 பேரின் பெயர் பட்டியலையும் நிராகரித்து விடுவார்’’ என்று மூத்த காங்கிரஸ் தலைவர் (சாவந்த்) தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளிடையே பதவியை பகிர்ந்து கொள்வதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றாலும், மாநில அரசுக்கும் கவர்னர் கோஷ்யாரிக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. எனவே, தற்போதை உறுப்பினர்கள் நியமன விவகாரம் ஆளும் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதலை தீவிரமாக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்தியாவில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சட்டமன்ற மேலவை உள்ளது.

* மகாராஷ்டிரா மேலவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 78. இதில் 12 நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

* கடந்த ஏப்ரல் மாதமே மகாராஷ்டிராவில் 9 மேலவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

* காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா 4 உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

Related Stories:

>