×

அய்யோ தொண்டை கம்முதே! டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு

டெல்லியை பொருத்தமட்டில் பெயருக்கு தான் தலைநகர் ஆனால் அதற்கு தேவையான உயிர் காற்று கிடைக்கிறதா என்றால் அது நூறு சதவீதம் தற்போது வரை கேள்விக்குறியாக தான் உள்ளது. ஏன்னெனில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் உள்ள காற்று மாசுவின் காரணத்தினால் உயிர் வாழ தகுதியே இல்லாத தரமற்ற காற்றின் சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளும் இன்று முதல் கடந்த பல ஆண்டுகளாகவே தோல்வியில் மட்டுமே முடிந்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மையப் பகுதியில் ஆரம்பித்து பிப்ரவரி இறுதி வரை இதே போர்கால நிலையில் தான் நகர மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக டெல்லி நகரைத்தை பொருத்தவரையில் ரோகிணி, துவாரகா, ஓக்லா பேஸ் 2, பஞ்சாபி பாக், ஆனந்த் விகார், விவேக் விகார், மயூர் விகார், வாசிர்பூர், ஜகாங்கிர்புரி, ஆர்.கே.புரம், பவானா, நரேளா, முண்டகா மற்றும் மாயாபு என மொத்தம் 13 பகுதிகள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாசி கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமகா அறிவித்துள்ளது. இதில் மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது என்பது கூடுதல் தகவலாகும். குறிப்பாக காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர் மற்றும் அதிகாரிகள் என போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக மட்டும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதில் பணியாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இயற்கையான காற்றின் வேகம் அதிகரித்தால் மட்டுமே காற்றின் தரம் உயரும் என்பது நிதர்சனமான உன்மையாகும். குறிப்பாக வார விடுமுறையின் போது டெல்லி நகரம் முழுவதும் காற்று மாசு அதிகரிக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் வேலை நாட்களை விட விடுமுறை நேரத்தில் தான் பொழுதுப் போக்கிற்காக மக்கள் போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க பஞ்சாப், அரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகளால் தான் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி மதன் பி லோகூரை நியமித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் விரிவான ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தாலும், பிரச்சனை குறித்த இடைக்கால அறிக்கையை ஓய்வு நீதிபதி மதன் பி லோகூர் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று மாசுவால் அவதிப்படும் டெல்லி மக்கள் கூறுபோது,”கொரோனா ஊரடங்கின் போது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மாசு இல்லாத காற்று இருந்து வந்தது. ஆனால் வாகனப் போக்குவரத்து மற்றும் பயிர் கழிவுகள் எரிப்பு எப்போது அதிகமாகியதோ அப்போதில் இருந்தே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து விட்டது. குறிப்பாக இயற்கையான காற்றுக் கிடைக்கூடிய அதிகாலை நேரத்தில் கூட சுமார் 10 நிமிடத்துற்கு மேல் வெளியில் நின்று சுவாசம் செய்தால் காற்றில் உள்ள மாசு துகள்கள் தொண்டைக்குள் சென்று கரகரப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதில் மீள வேண்டுமானால் உடனடியாக சுடு நீர் குடித்தோ அல்லது வாய் கொப்பளித்தால் தான் மட்டுமே மீண்டும் சாதாரண நிலைக்கு வர முடியும். இல்லையென்றால் கஷ்டம் தான். இதில் பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகள் பாடு என்பது மிகப்பெரிய திண்டாட்டம் தான் என்றனர். குறிப்பாக இதுகுறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றால் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவது போன்று என்னடா தொண்டை கம்முது!? என்ற நிலை தான் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் நிலையாக உள்ளது.

Tags : tremble ,Delhi , Alas, the throat is sore! Air pollution that makes the people of Delhi tremble
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...