தொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் விரக்தி

ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளதால், ஆயுத பூஜை விடுமுறை வியாபாரமும் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் விரக்தி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, தொடர் விமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஓட்டல், லாட்ஜ், காட்டேஜ் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வியாபாரம் அதிகரிக்கும். சாதாரண சிறு வியாபாரிகளுக்கு கூட சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் போது, வியாபாரம் அதிகரிக்கும்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இ பாஸ் பெற்று வர வேண்டும். பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் அனுமதி கிடைப்பதில்லை. இதனால், நாள் தோறும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே ஊட்டிக்கு வந்துச செல்கின்றனர். பொதுவாக ஆயுத பூஜை விடுமுறையின் போது, கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிடுவார்கள்.

ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பறி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதனால், இங்குள்ள சுற்றுலா தலங்கள் மட்டும் வெறிச்சோடுவது மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களும் காற்று வாங்கியது. இதனால், சிறு வியாபாரிகள் முதல் பெரிய அளவிலான கடை உரிமையாளர்கள் வரை அப்செட் ஆகியுள்ளனர்.

Related Stories:

>