போக்குவரத்து கழக சொத்துகள் புனரமைப்பு தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சர் கெலாட் தகவல்

புதுடெல்லி: மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சொத்துகளை புனரமைக்க மத்திய அரசின் தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்துடன் (என்பிசிசி) ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். மாநில போக்குவரத்து நிறுவனத்தில் பொது போக்குவரத்துக்காக 3,800 பஸ் உள்ளது. இந்த பஸ்களை பராமரிக்க இரண்டு பணிமனைகளும், 18 முனையங்களும், 36 டெப்போக்களும் உள்ளன. அது மட்டுமன்றி போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு என 3 குடியிருப்பு காலனிகளும் உள்ளது. பஸ் டிக்கெட் வசூல், டெப்போக்களிலும், முனையங்களிலும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போக மிஞ்சிய இடங்கள் வங்கிகள், மதர் டெய்ரி பால் பூத், செல்போன் டவர் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டும், விளம்பர பலகைகள் வைப்பதற்கு வாடகை வசூல் என்ற வகையிலும் போக்குவரத்து துறைக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் தற்போது பயன்பாட்டில் உள்ள டெப்போக்கள், பனிமனைகள், குடியிருப்பு பகுதிகள் என போக்குவர்த்துக்கு சொந்தமான நிலங்களில் காலாவதி நிலைமையில் உள்ள கட்டிடங்களை புதுப்பிப்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, காலாவதி நிலையில் உள்ள கட்டிடங்களை மத்திய அரசின் என்பிசிசியை உதவியுடன் புதுப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக என்பிசிசியுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இது குறித்து அமைச்சர் கெலாட் கூறியதாவது: தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை புனரமைப்பு செய்ய உள்ளோம். அதற்கு என்பிசிசியை நியமிக்க தீர்மானித்து உள்ளோம். இப்போதுள்ள கட்டிடங்கள் மட்டுமன்றி, அடுக்குமாடி பஸ் பார்க்கிங் கட்டிடம் கட்டவும், குடியிருப்பு மற்று டெப்போ, பஸ் முனையங்களில் தனியாரைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கவும் முடிவு செய்துள்ளோம்.

குறிப்பாக வசந்த் விகார், ஹரி நகர் டெப்போ மற்றும் ஷாதிப்பூர், ஹரி நகர் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நிறுவன ஊழியர் குடியிருப்புகளையும் மறுவடிவமைப்பு செய்ய கூட்டத்தில் சம்மதம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் போக்குவரத்து துறைக்கு மேலும் வருவாய் ஈட்டித்தரும். கர்ப்பிணியாக துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாத பேறுகால விடுப்பு அளிக்க கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. நிரந்தர ஊழியர்கள் மட்டுமன்றி ஒப்பந்ததார ஊழியருக்கும் பேறுகால விடுப்பு பொருந்தும். இவ்வாறு கெலாட் கூறியுள்ளார்.

Related Stories:

>