×

சேலம் அரசு மருத்துவமனையில் 9 மாதத்தில் 8,653 பேருக்கு பிரசவம்: மருத்துவர்கள் பெருமிதம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 9 மாதத்தில் 8,653 பிரசவங்கள் வெற்றிகரமாக நடந்துள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தவர்களும் பிரசவித்து குணமாகி சென்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம் மட்டுமில்லாமல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும்  நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பணி பெண்களுக்கு என தனி கட்டிடம் உள்ளது. மேலும், இங்குள்ள  வார்டில் நாள்தோறும் சராசரியாக 20 பிரசவங்கள் நடைபெற்று வந்தது. பல ஆண்டுகளாக சராசரி நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிரசவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரசவிக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் 872, பிப்ரவரி மாதத்தில் 699, மார்ச் மாதத்தில் 868, ஏப்ரல் மாதத்தில் 977, மே மாதத்தில் 1,082, ஜூன் மாதத்தில் 911, ஜூலை மாத்தில் 927, ஆகஸ்ட் மாதத்தில் 1,123, செப்டம்பர் மாதத்தில் 1,194 பிரசவங்கள் நடந்துள்ளன. இந்த மருத்துவமனையில் செப்டம்பர் மாதத்தில் நடந்த 1,194 பிரசவங்கள் தான் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 500 முதல் 600 எண்ணிக்கையிலான பிரசவங்கள் நடந்துள்ளன. இங்கு நடந்த 8,653 பிரசவங்களில் 60 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது, மீதமுள்ள 40 சதவீதம் சுகப்பிரவமாக குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் தனி வார்டில் அனுமதித்து  சிறப்பு கவனம் செலுத்தி, கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

கொரோனா அச்சத்தையும் மீறி பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு டீன் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், ஆஎம்ஒ ராணி மற்றும் மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் ஆரம்பித்த நாளில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் வருவது அதிகரித்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சைகள் அளித்து விடுகின்றனர். ஆனால் ரத்த அழுத்தம், வலிப்பு நோய்,சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கு ஆளானாவர்கள் அதிகமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

மேலும், தாலுகா மருத்துவமனைகளில் இருந்து உயர் சிகிச்சைக்காகவும் தலைமை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கின்றனர். கொரோனா தொற்றுடன் வருபவர்களுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் சிலர் கொேரானா தொற்று உள்ள போது, குழந்தை பெற்றெடுத்து, சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுடன் வருபவர்களுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : deliveries ,Doctors ,Salem Government Hospital , 8,653 deliveries in 9 months at Salem Government Hospital: Doctors proud
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை