×

நிலத்தடி நீர், விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த 250 ஏக்கர் பரப்பளவிலான தஞ்சை சமுத்திர ஏரி

* ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் அவலம்
* கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்

தஞ்சை: நெற்கஞ்சியமான தஞ்சை மாவட்டம், தமிழகத்திலேயே பாரம்பரிய மிகுந்தது. தஞ்சை மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. தஞ்சையை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். தஞ்சை முழுவதும் வயல்கள் நிறைந்த பகுதியாகவும், பனை மற்றும் பல்வேறு மரங்களுடன் செழிப்பாக இருந்ததால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயருடன் இருந்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சையில் பெயர் பெற்று விளங்குவது தஞ்சை மாரியம்மன் கோயில் செல்லும் சாலையின் ஒரத்திலுள்ள சமுத்திர ஏரி. இந்த சமுத்திர ஏரி 200 ஆண்டுகள் பழமையானது 250 ஏக்கர் பரப்பளவில் கடல் போல் காட்சியளிக்கின்றது. மராட்டியர் காலத்தை சேர்ந்த ராணி, தனது கணவரிடம் கடல் போல் உள்ள சமுத்திரத்தை பார்வையிட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

அதிலும், தினந்தோறும் ஒய்வின் போது தஞ்சையிலுள்ள இந்திராமந்திரம் என்ற மண்டபத்திலிருந்து பார்க்கும் போது தெரியவேண்டும் என்று ராணி கூறியதால், இந்த சமுத்திர ஏரி அமைக்கப்பட்டது என கூறுகின்றனர். தஞ்சை நெற்களஞ்சியமாக இருப்பதால், நீர் நிலைகளுக்கும் முப்போக சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்படுவதால் இதுபோன்ற சமுத்திர ஏரியை அமைத்திருக்கலாம் என்றும் கூறுவார்கள். தஞ்சைக்கு வருபவர்களும் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயில், வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு செல்லும் வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பொதுமக்கள் இந்த ஏரி கரையில் நின்று இன்றைய தினம் வரை சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.இத்தகைய சிறப்பு பெற்ற சமுத்திர ஏரிக்கரையை சுற்றிலும் கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புகள், தொழிற்கூடங்களாலும் ஆக்கிரமிப்பட்டுள்ளது.

இது போன்ற ஆக்கிரமிப்புகளால் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள ஏரி, தற்போது மிகவும் சுருங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. அங்கிருந்து வரும் கழிவு நீர் ஏரிக்கரையில் சென்று கலக்கின்றது. இதே போல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பாதாள சாக்கடையின் கழிவு குழாய்களில் செல்லும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தையும் அமைத்துள்ளனர். இதனால் சுத்திகரிப்பு செய்த கழிவு நீர் வெளியேறும் போது, நுங்கும் நுரையுமாக துர்நாற்றத்துடன் வயல் வெளிகளில் செல்கிறது.
மாரியம்மன் கோயிலிருந்து தஞ்சை கீழவாசல் பகுதிக்கு வருபவர்கள், நுங்கும் நுரையுமாக வெளியேறும் கழிவு நீரில் நடந்து செல்வதால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது போன்ற நிலையால் அருகில் குடியிருப்பவர்களும், வயல்வெளிகளில் வேலை செய்பவர்களும் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாசிகளை கவர்வதற்காக 2014ம் ஆண்டு, சுற்றுலா தலமாக அமைத்து பல்வேறு பணிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அறிவித்தனர். ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தஞ்சை சமுத்திர ஏரி, கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் குட்டையாகவும், சுகாதார கழிவுகள் சுத்திகரிக்கும் மையத்தின் கழிவு நீர் செல்லும் இடமாகவும், ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ளது. இதே போல் நான்கு வழிச்சாலை அமைப்பதால் பாலம் கட்டாமல், ஏரியை இரண்டாக்கி, பணிகள் நடைபெற்று வருவது வேதனையான செயலாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் சமுத்திர ஏரியை சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுகளை கொட்டாமல் தண்ணீரை சேமிக்கும் ஏரியாக உருவாக்க வேண்டும் என பொது மக்கள், விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார் கூறுகையில்: தஞ்சை மாநகரத்தையொட்டி 250 ஏக்கரில் மாரியம்மன் கோயில் ஊராட்சியில் பெரிய ஏரியான சமுத்திரம் ஏரி உள்ளது. வடவாற்றிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள், சாகுபடி வயல்களுக்கு தண்ணீர் கொண்டு சேர்த்த பின்னர், கடைசியாக சமுத்திரம் ஏரியில் சென்று விடுகிறது. சமுத்திரம் ஏரியால் இப்பகுதியின் நிலத்தடி நீருக்கு பெரிதும் பயன்பெற்று வருகிறது.சித்திரை கோடை காலத்திலும் வற்றாத ஏரி, கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலத்தில் வறண்டு போய்விடுகிறது. ஏரியை சுற்றுப்பகுதியிலுள்ள குடியிருப்புகள், தஞ்சை நகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள், கோழி இறைச்சி கடைகள், ஓட்டலில் உணவு சாப்பிட்ட இலைகள், பழைய வீடுகளை இடிப்பதிலிருந்து கிடைக்கும் பயன்படாத கற்கள்,

மண், பழைய பயன்படாத சாக்கு மூட்டைகள், நெல் கருக்காய்கள், சுகாதார மற்றும் குப்பை கழிவுகள், வாகனங்களின் கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகளை லாரிகள், லோடு ஆட்டோக்களில் கொண்டு வந்து ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதிக்குள் நுழைந்தாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாயதாமரை செடிகள் ஏரி முழுவதும் மண்டியுள்ளதால் தண்ணீர் மிகுந்த அழுக்கடைந்து, துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ளவர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையில் குப்பைகள், கழிவுகளை கொட்டக்கூடாது என்று பொதுப்பணித்துறையால் எச்சரித்தும், இரவு நேரங்களில் அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. சமுத்திரம் ஏரி மன்னர்கால கலாசார பண்பாட்டு சின்னம். சாகுபடிக்கு போக மீதமுள்ள நீரை சேமித்து வைப்பது எப்படி என்ற வழிகாட்டிக்கான சான்றாகும்.

ஸ்மார்ட் சிட்டி என தஞ்சையில் பல கோடி ஒதுக்கி யார் பையில் கொட்டுகிறார்களோ இல்லையோ குப்பையை சமுத்திரம் ஏரியில் கொட்டுவதை யாரும் தடுப்பதில்லை என்றார். சமூக ஆர்வலர் சந்திரகுமார் கூறுகையில்: சமுத்திர ஏரி, மராட்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. தஞ்சை அரண்மனையிலிருந்து சுரங்கப்பாதை வழி இருப்பதாகவும் பட்டத்து இளவரசிகள் சுரங்க பாதை வழியாகச்சென்று நீராடுவதற்கும், பொழுதுபோக்கு வதற்கான இடமாக இருந்தது என்றும் கூறுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திர ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி படகு விடுவதாக மத்திய அரசு நிதி உதவியோடு திட்டம் செயல் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது காலப்போக்கில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போது ஏரியின் சுற்றுப்பகுதி கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மண் மூடி வருவதால், சிறிதளவே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் சாகுபடிக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போய் விடுகிறது. ஒரு காலத்தில் அப்பகுதியில் முப்போகம் சாகுபடி செய்து வந்த நிலையில் இது போன்ற அவல நிலையால் தற்போது சமுத்திர ஏரி தண்ணீரை கொண்டு ஒரு போகம் சாகுபடிக்கே தண்ணீர் பற்றாகுறையாகியுள்ளது. விவசாயிகள் மின் மோட்டாரை கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர். ஏரியை சுத்தப்படுத்தி ஆழப்படுத்தி, சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரும் நீர் நிலையாக ஏற்பாடு செய்வதற்கான அத்தனை வாய்ப்பு வசதிகளும் தற்போது உள்ளது.பெய்து வரும் மழை நீரை தேங்கி வைப்பதற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த ஏரியை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்திடவும், பொலிவுறு நகரமான தஞ்சைக்கு மேலும் அழகு சேர்க்கின்ற முறையில் இந்த ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மை குறித்து நீதிமன்றங்களும் பல உத்தரவுகள், தீர்ப்புகள் வழங்கியும் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருக்கின்து. இந்த ஏரியில் தண்ணீர் சேமித்து வைத்தால், வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாமல் மக்களை காப்பாற்ற முடியும். சமுத்திரம் ஏரியில் குப்பை கொட்டி அசுத்தம் செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை தூய்மையாக பராமரிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாத்துறை மூலம் ஏரியின் அழகை மேம்படுத்தி சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்றார்.

நெற்களஞ்சியமான
தஞ்சைக்கு வருபவர்கள் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயில், வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு செல்லும் வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பொதுமக்கள் இந்த ஏரி கரையில் நின்று இன்றைய தினம் வரை சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

மராட்டியர் காலத்தை சேர்ந்த ராணி, தனது கணவரிடம் கடல் போல் உள்ள சமுத்திரத்தை பார்வையிட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அதிலும், தினந்தோறும் ஒய்வின் போது தஞ்சையிலுள்ள இந்திராமந்திரம் என்ற மண்டபத்திலிருந்து பார்க்கும் போது தெரியவேண்டும் என்று ராணி கூறியதால் இந்த சமுத்திர ஏரி அமைக்கப்பட்டது என கூறுகின்றனர்.

சமுத்திர ஏரி, மராட்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. தஞ்சை அரண்மனையிலிருந்து சுரங்கப்பாதை வழி இருப்பதாகவும் பட்டத்து இளவரசிகள் சுரங்க பாதை வழியாகச்சென்று நீராடுவதற்கும், பொழுதுபோக்கு வதற்கான இடமாக இருந்தது என்றும் கூறுவார்கள்.

Tags : Tanjore Ocean Lake , Groundwater, 250 acres of Tanjore Ocean Lake used for agriculture
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...