கன்னியாகுமரி முருகன்குன்றம் கோயிலில் கொள்ளை

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி முருகன்குன்றம் கோயிலில் பணம், தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன்குன்றத்தில் உள்ள வேல்முருகன் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தற்போது நவராத்திரி விழா நடப்பதால், அங்கு வரும் பக்தர்கள், முருகன்குன்றம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கிறார்கள். நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு பூஜைகள் முடிந்து பூசாரி ராஜரத்தினம் நடையை சாத்தி விட்டு கோயில் சாவிகளை வழக்கம் போல் கோயில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில் வைத்து விட்டு சென்றார்.

நேற்று காலை 6 மணிக்கு நடையை திறக்க வந்த போது மடப்பள்ளி கதவு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த கோயில் அலுவலக அறை மற்றும் சன்னிதான கதவுகளின் சாவிகளையும் காண வில்லை.  கோயிலுக்குள் சென்று பார்த்த போது அங்கு அனைத்து கருவறைகளும் திறந்து கிடந்தன. அலுவலக அறை திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதே போல் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன. வெள்ளி அங்கி உடைக்கப்பட்டு கோயிலுக்குள் வீசப்பட்டு இருந்தது. விநாயகர் சன்னதி, வேல் சன்னதி, திருக்கல்யாண சன்னதி கதவுகளும் திறந்து கிடந்தன. அங்கிருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. கோயிலில் இருந்த 3 உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் கன்னியாகுமரி போலீசார், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொள்ளை போன உண்டியல் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு பல லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.  முருகன்குன்றம் கோயில் அருகே தற்போது புதிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 3 கடைகளின் கட்டுமான பணிகள் முடிந்து, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராக்களையும் உடைத்ததுடன், கேமரா காட்சிகள் பதிவாக கூடிய ரிசிவரையும் உடைத்து எடுத்து சென்றனர். அந்த ரிசிவர் 3 கடைகளில் எந்த கடையில் இருக்கிறது என்பதும் கொள்ளை கும்பலுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது.  

அந்த கடையை சரியாக உடைத்து, எடுத்து சென்றுள்ளனர். மேலும் கோயில் சாவிகள் அனைத்தும் மடப்பள்ளியில் தான் இருக்கிறது என்பதும் தெரிந்திருக்கிறது. எனவே அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து செல்லும் நபர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது அருந்தி அட்டூழியம்

கோயில் வளாகத்தில் மது பாட்டில்கள் கிடந்தன. எனவேகொள்ளையர்கள் கோயில் வளாகத்துக்குள் வந்ததும், மது அருந்தி உள்ளனர். பின்னர் தான் மடப்பள்ளியை உடைத்து சாவிகளை எடுத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இதே போல் சுக்குப்பாறை தேரிவிளையில் உள்ள பலசரக்கு கடையில், முன் பக்க கதவை உடைத்து, ரூ.1000 மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன், பஞ்சலிங்கபுரத்தில் 3 கோயில்களில் ெகாள்ளை நடந்து இருந்தது. தென்தாமரைக்குளத்தில் பெரிய அம்மன் கோயிலிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். தொடர்ச்சியாக நடந்து வரும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>