×

அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டபணிகள் நிறைவு குடிநீர் விநியோகம் தொடங்குவது எப்போது?

*3 ஊராட்சி ஒன்றியங்கள், 9 பேரூராட்சி மக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில் : அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்தாலும், மின்வாரிய அனுமதிக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குமரியில், நீர் நிலைகள் நிரம்பி இருந்ததாலும், பல கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் இருந்தது. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் வழியோர கிராமங்களான பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட  விளாங்காடு, திட்டுவிளை, அரசன்குழி  மற்றும் ஈசாந்திமங்கலம், நாவல்காடு, இறச்சகுளம், பேச்சான்குளம், புத்தேரி ஆகிய 9 வழியோர கிராமங்களுக்கும் முக்கடல் அணை தண்ணீர் வழங்கப்பட்டது.

இதில், நாகர்கோவில் நகராட்சியை பிரதானமாக கொண்டு முக்கடல் அணை திட்டம் உருவாக்கப்பட்டதால், கிருஷ்ணன்கோயிலில்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு  அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் பல்வேறு முறைகளில் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதுபோல், சுசீந்திரம், கன்னியாகுமரி பேரூராட்சிகளுக்கும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

ஆனால், பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் இதர வழியோர கிராமங்கள் முக்கடல்அணையில் இருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், முக்கடல் அணையில் தண்ணீர் மட்டம் குறையும் போதும், அனந்தானாறு கால்வாயில் இருந்து தண்ணீர் பெறும்போதும், குடிநீரில் புழுக்கள், நுண்ணுயிரிகள் நிறைந்து காணப்பட்டன. வெறும் கண்களுக்கு கூட இவை காட்சி தந்து மிரட்டின. இதுபற்றி கடந்த 2001ம் ஆண்டு முதலே மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் தரப்பட்டன. இதனையடுத்து 2008ம் ஆண்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர், அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. 06.092012ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

 இதன்படி, கோதையாற்றில் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் பெறப்பட்டு, அழகியபாண்டியபுரம் அருகே அருமநல்லூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, தண்ணீரை சுத்திகரித்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அழகியபாண்டியபுரம் உள்பட 9 பேரூராட்சிகள், தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகளில் உள்ள 246 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 109.8 கோடி மதிப்பீட்டில் திட்டம் கடந்த 12.04.2013ல் நிதி அனுமதிக்கப்பட்டு, 15.09.2015ல் பணி ஏற்பு ஆணை வழங்கப்பட்டது.

இதன்படி 2016ம் ஆண்டு கோதையாற்றில் 6 மீட்டர் விட்டமுள்ள  கிணறு அமைத்து,  அதில் நீர் எடுக்கப்பட்டு, 22.28 கி.மீ தொலைவிற்கு இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டு,  அருமநல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு  கொண்டு வரப்படுகிறது. பின்னர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  144.545 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோக குழாய்கள் மூலம் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.  இதற்காக 39 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளும், 265.455 கி.மீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலம் 297 பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கும் புதியதாக கட்டப்பட்ட 4 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றாலும், இந்த திட்டம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதற்கு மின்வாரியத்தின் அலட்சிய போக்கே காரணமாக கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்பட தண்ணீர் எடுக்கும் கிணறு முதல், விநியோகம் வரை நீரை உந்ததுல் செய்ய மின்மோட்டார்கள் அவசியம். இதற்கு இணைப்பு வழங்க கோவையை தலைமையிடமாக கொண்ட மின்வாரிய பாதுகாப்பு ஆய்வுக்குழு நேரில் ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, பரிந்துரைக்கும். இதன்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னர், பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும்.

தற்போது முதல் கட்டமாக மின்வாரிய பரிந்துரைப்படி, அனைத்து நீரேற்று நிலையங்களிலும் பிரேக்கர் போன்ற மின்சாதன பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு விட்டன.  எனினும், கோவையில் இருந்து ஆய்வுக்குழு பாதுகாப்பு சான்று வழங்கிய பின்னரே, இந்த திட்டத்திற்கான சோதனை ஓட்டம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.  எனவே விரைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2044ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும்

அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம்  இடைக்கால ஆண்டாக 2029ம் ஆண்டு  முறையே 2 லட்சத்து  69 ஆயிரத்து 799 பேருக்கும், 2044ம் ஆண்டு  2 லட்சத்து 96 ஆயிரத்து 403 பேருக்கு 18.24 மற்றும் 20.28 மில்லியன் லிட்டர் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  

*  ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு பேரூராட்சிகளில் 90 லிட்டரும், 246  ஊரக  குடியிருப்புகளில்  உள்ளவர்களுக்கு ஒருவருக்கு  40 லிட்டர் வீதம் 16.58 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது விநியோகம் செய்யப்பட உள்ளது.
*இக்குடிநீர் திட்டற்கான நிதி  மத்திய அரசின்  தேசிய ஊரக குடிநீர் திட்டம்,  மாநில அரசின்  குறைந்தபட்ச தேவைத் திட்டம் மற்றும் பேரூராட்சிகளின் 20 சதவீத பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலைகள் எப்போது சீராகும்

இந்த குடிநீர் திட்டத்திற்காக நெடுமங்காடு சாலை குலசேகரம் முதல் துவரங்காடு வரை சேதமடைந்தது. பின்னர், நாகர்கோவில் மாநகராட்சி புத்தன் குடிநீர் திட்டத்தால், சாலைகள் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. இதனால் 5 ஆண்டுகள் இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாது. இந்த சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் ஏராளம் பேர் பலியாகி உள்ளனர்.


எனினும் நெடுமங்காடு சாலை மற்றும் பாலமோர் சாலை முழுவதுமாக சீரமைக்கப்படாமல் மக்களையும், வாகனங்களையும் மிரட்டியபடியே உள்ளன. எனவே விரைந்து குடிநீர் பணிகளை முடித்து, தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு, சாலைகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


பேரூராட்சிகள் எவை?

அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி,  தாழக்குடி, தேரூர்,  ஆரல்வாய்மொழி,  மருங்கூர், மைலாடி, கொட்டாரம், அழகப்பபுரம் உள்பட 9 பேரூராட்சிகள், தோவாளை, அகஸ்தீசுவரம், ராஜாக்கமங்கலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகளில் உள்ள 246 கிராமங்கள்.


எதிர்ப்பால் தாமதம்


குமரியில் பல முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் ஒரு தரப்பினரின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகளை தாண்டியே நிறைவேறி உள்ளன. மேலும் நடைபெற்ற வருகின்றன. இதனால், பல ஆண்டுகள் காலதாமதம், செலவு அதிகரிப்பு மக்கள் அவதி போன்றவையும் ஏற்படுகின்றன. அழகிய பாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் களியல்,  திற்பரப்பு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள் நடைபெற்றதுடன், நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.


நீதிமன்ற அனுமதி கிடைத்த பின்னரும், குலசேகரம் பகுதியில் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு கிளம்பியது. 3 முறை பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. பின்னர் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய்கள் பதிக்கப்பட்டு, இந்த திட்ட பணிகள் தொடங்கின.


தேரூரில் சுத்திகரிப்பு நிலையம்

முக்கடல் அணை திறக்கப்பட்டபோதே, நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமின்றி ஆன்மீக தலமான சுசீந்திரம் மற்றும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கும் 24 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், நாகர்கோவிலில் இந்த பகுதிகளுக்கு செல்லும் குழாய்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் இருந்தது. 2000ம் ஆண்டு 2வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்படி தேரூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட பின்னர், தேரூர், சுசீந்திரம், கன்னியாகுமரிக்கு தேரூரில் இருந்தே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.


இதற்காக நாகர்கோவில்செல்லும்  குழாய்களில் இறச்சகுளம் பகுதியில்  இருந்து தண்ணீர் பெறப்பட்டு தேரூருக்கு தற்போது சென்று வருகிறது.

*  அருமநல்லூரில் தற்போது அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 19.15 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்க முடியும்.


Tags : Alagiyapandiyapuram , Nagarcoil,Drinking Water, Kanyakumari, water
× RELATED உக்கிரன்கோட்டை- அழகியபாண்டியபுரம்...