×

விவசாய தோட்டத்தில் மயங்கி கிடந்த கரடி சாவு : வனத்துறை சிகிச்சை பலன் தரவில்லை

கோவை :  கோவை வனப்பகுதி விவசாய தோட்டத்தில் மயங்கி கிடந்த கரடி பலியானது. கோவை ஆலாந்துறை மங்கலம்பாளையம் வனத்தில் சுற்றிய 15 வயதான ஆண் கரடி ஒன்று அதே பகுதியில் விவசாய தோட்டத்தில் மயங்கி நிலையில் கிடந்தது. இது தொடர்பாக  மதுக்கரை வனச்சரகத்தினருக்கு  விவசாயிகள் தகவல் அளித்தனர். ரேஞ்சர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் அங்கே சென்று கரடியை கூண்டில் ஏற்றி, சாடிவயல் யானை முகாம் வளாகத்திற்கு கொண்டுசென்றனர்.

அங்கு கரடிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு ஊட்டச்சத்து பானம், பழங்கள் வழங்கப்பட்டது. ஆனால் கரடியால் எதுவும் சாப்பிட முடியவில்லை. அதன் பற்கள் ேதய்ந்து காணப்பட்டது. மிகவும் சோர்வுடன் காணப்பட்ட கரடி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தது. இறந்த கரடியின் உடல் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கரடி சில நாட்கள் சரியாக உணவு சாப்பிட முடியாமல் பசி, பட்டினியுடன் இருந்துள்ளதாக தெரியவந்தது. கரடியின் குடலில் உணவு தானியங்கள் இல்லாமல் இருந்தது. அதிக வயதாகி விட்டதால் அதனால் தேன், தினை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட முடியவில்லை என தெரிகிறது.

நடக்க முடியாத அளவிற்கு அதற்கு பக்கவாத பாதிப்பும் கணிசமாக இருந்துள்ளது. உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே வந்த கரடி மயங்கி கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. இறந்த கரடியை வனத்துறையினர் வனப்பகுதியில் தகனம் செய்தனர்.

Tags : Bear, Coimbatore, Bear Dead
× RELATED சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர்...