×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 750 பேர் தேர்ச்சி: மெயின் தேர்வு ஜனவரி 8ம் தேதி தொடக்கம்

சென்னை:  ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்  சுமார் 750 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜனவரி 8ம் தேதி மெயின் தேர்வு தொடங்குகிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  (யு.பி.எஸ்.சி.)ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ்  பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர்  விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே மாதம் 31ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை தொடர்ந்து ஜூன் 5ம்  தேதிக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து  அக்டோபர் 4ம் தேதி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தமிழகத்தில்  சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 300 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. இத்தேர்வை சுமார் 50,000 பேர் எழுதினர்.  இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in  வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெற்ற 19 நாட்களில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.

இது தேர்வு எழுதிய மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர்  எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும்  சுமார் 750 பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் படித்த 657 பேர்  முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வுக்கு  ஆன்லைன்(upsconline.nic.in) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 11ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர்  அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : Tamil Nadu ,Civil Service Primary Examination ,IPS ,IAS ,IRS: Main Examination , 750 candidates from Tamil Nadu pass IAS, IPS, IRS posts
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...