வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு டெல்லி கேப்பிடல்சை அடக்கியது நைட் ரைடர்ஸ்

அபுதாபி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் சாம்ஸ்,  பிரித்விக்கு பதிலாக நார்ட்ஜ், ரகானே இடம் பெற்றனர். கொல்கத்தா அணியில் பான்டன், குல்தீப் நீக்கப்பட்டு, சுனில் நரைன், நாகர்கோட்டி  சேர்க்கப்பட்டனர். ஷுப்மான் கில், நிதிஷ் ராணா இருவரும் கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். ராணா ஒரு முனையில் உறுதியுடன் விளையாட...  கில் 9 ரன், ராகுல் திரிபாதி 13 ரன், தினேஷ் கார்த்திக் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ரன்னுக்கு 3 விக்கெட்  இழந்து தடுமாறிய நிலையில், ராணா - சுனில் நரைன் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

ராணா 35 பந்தில் அரை சதம் அடிக்க, நரைன் 24 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும்  4வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்தனர். நரைன் 64 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ரகானே வசம் பிடிபட்டார். ராணா  81 ரன் (53 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மோர்கன் 17 ரன் விளாசி கடைசி ஓவரின் கடைசி 2 பந்தில் ஆட்டமிழக்க, கேகேஆர் அணி 6  விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ், ரபாடா, ஸ்டாய்னிஸ் தலா 2  விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், கம்மின்ஸ் மற்றும் வருண்  சக்ரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் - ரிஷப்  பன்ட் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். பன்ட் 27 ரன், ஷ்ரேயாஸ் 47 ரன் எடுக்க... மற்ற வீரர்கள் சொற்ப  ரன்களில் நடையைக் கட்டினர். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே சேர்த்து 59 ரன் வித்தியாசத்தில்  தோல்வியைத் தழுவியது. ஆர்.அஷ்வின் 14 ரன், நார்ட்ஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா பந்துவீச்சில் வருண் 4 ஓவரில் 20 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். கம்மின்ஸ் 3, பெர்குசன் 1  விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியால் கேகேஆர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது.

Related Stories:

>