பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 3 லட்சம் பறித்த 6 பேர் கைது: போலி சாமியாருக்கு வலை

தண்டையார்பேட்டை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, மீனாட்சிபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் ராஜகுமாரன் (45). இவர், கடந்த சில  நாட்களுக்கு முன் தென்காசியில் ஒரு சாமியாரை சந்தித்து, ‘எனது குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது,’ என  தெரிவித்துள்ளார்.  அதற்கு சாமியார், ‘உனது குடும்பத்துக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர். அதனை எடுக்க 2 கோழி மற்றும் 2 லட்சத்துடன்  சென்னைக்கு வா,’ என கூறியுள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் தனது வேனை விற்று 2 லட்சத்துடன் கடந்த 20ம் தேதி சென்னை வந்து, ஸ்டான்லி  அரசு மருத்துவமனை அருகே சாமியாரை சந்தித்தார். அப்போது, ராஜகுமாரனிடம் இருந்து பணத்தை  பெற்ற சாமியார், பூஜை பொருட்களை வாங்கி  வருவதாக சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து ராஜகுமாரன் அளித்த புகாரின்பேரில்  வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  அதில், திருவள்ளூர் மாவட்டம், புட்லூரை சேர்ந்த யுவராஜ் (42) மோசடியில்  ஈடுபட்டதும், இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பில்லி சூனியம் எடுப்பதாக 1 லட்சத்தை  ஏமாற்றியதும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் (34), காசிேமடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்த  பாப்பா (56), மதுரை சிந்தாமணியை சேர்ந்த அமர்நாத் (21), கொடுங்கையூர் தென்றல் நகரை சேர்ந்த ஜெயந்தி (29), போலி சாமியாரின் மனைவி  கலையரசி (35) மற்றும் 16 வயது மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான போலி சாமியார் யுவராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: