தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்

சென்னை:மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நேற்று அவர்களின் படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை  எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:  ஆளுநர் மத்திய அரசின் எடுபிடியாகவும், மோடியின் கைப்பாவையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 7.5 சதவீதம் சட்ட மசோதாவில் ஆராய்ச்சி  செய்ய என்ன இருக்கிறது. அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது  ஓரவஞ்சனை. சங் பரிவார்களின் ஏவுதலுக்கு ஏற்ப ஆளுநர் தமிழர் விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நான்கு வார காலத்தில் எந்த  வழக்கறிஞர்களை வைத்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறார். ஆளுநருக்கு மனமில்லாததால் தான் இழுத்தடிக்கிறார்.

தமிழக ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை மதிப்பவர். உயர்வானவர். பண்பாடு நிறைந்தவர். அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு  பதியப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக  இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முடிவு என்ன என்று எதிர்பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>