ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்: பூஜை பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது: பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் நேற்று காலை முதல் கூட்டம்  அலைமோதியது. இதனால் பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்தது. ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள்,  தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக சென்னையில் மயிலாப்பூர்,  புரசைவாக்கம், வானகரம், மாதரவம், பாரிமுனை, அமைந்தகரை, வள்ளலார்நகர், உள்ளிட்ட இடங்களில் விற்பனை கடந்த ஒரு வாரத்திற்கு  முன்பாகவே தொடங்கியது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று விற்பனை மேலும் களைகட்டியது. மயிலாப்பூர், புரசைவாக்கம் வானகரம் பூ  மார்க்ெகட், மாதவரம் பழமார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு பொருட்கள் வாங்க காலையில் இருந்தே வரத் தொடங்கினர்.

இதனால், விற்பனை களை கட்டியது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள்  விற்பனை கிடு, கிடுவென விலை உயர்ந்தது. அதாவது மாதவரத்தில் உள்ள பழமார்க்கெட்டில் ஆப்பிள் (1 கிலோ) 100 முதல் 150 வரை தரத்துக்கு  ஏற்றார் போல் விற்கப்பட்டது. மாதுளை 110 முதல் 160, சாத்துக்குடி 50 முதல் 70 வரை, ஆரஞ்ச் 40 முதல் ரூ60 வரை, அன்னாச்சி 1 40 முதல் ₹60  வரை, கொய்யா 50 முதல் 60 வரை, சப்போட்டா 50 முதல் 60 வரை, திராட்சை 80, வாழைத்தார் 250 முதல் 500 வரை விற்க்கப்பட்டது.  இதே போல  அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ 15 முதல் 20 வரை அதிகமாக விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ₹30 முதல் ₹40 வரை  அதிகமாக விற்கப்பட்டது.

மேலும் கொரோனா தாக்கத்தால் பூ விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை (1 கிலோ) 900, பீச்சிப்பூ 600, கேந்தி 30, சாமந்தி 50லிருந்து  100, அரளி பூ 300, பட்டன் ரோஜா 160 முதல் 200, நாட்டு ரோஜா(100 பூ ) 60க்கும் விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் பூ விலை மொத்த  விலையை விட 20 வரை அதிகமாக விற்பனையானது. இதேபோல, பொரி ஒரு படி 20, உடைத்த கடலை கிலோ 100, அவல் சிறிய ரகம் கிலோ 100,  வாழைக்கன்று இரண்டு 30, மாவிலை தோரணம் இரண்டு 20, வெள்ளை பூசணி 20 முதல் 50 வரை, தென்னை மட்டை தோரணம் இரண்டு 30 ஆகவும்  விற்கப்பட்டது.

காய்கறி விலைகளில் மாற்றம் இல்லாமல் பழைய விலைக்கே விற்கப்பட்டது. இதே போல் அனைத்து பூஜை பொருட்களின் விலையும்  கடுமையாக உயர்ந்தது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி  சென்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories: