×

ஆயுதபூஜையை முன்னிட்டு எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்த 15,000 பேர் வெளியூர் பயணம்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை காரணமாக எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்து 15,000 பேர் சொந்த ஊர்களுக்கு  புறப்பட்டுச்சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், சென்னையில் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்கள் தொடர்  விடுமுறையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் இன்று ஆயுத பூஜையாகும். இதன்காரணமாக இன்று, நாளை, நாளை  மறுநாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.   எனவே வழக்கம் போல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பலரும் அரசு எஸ்இடிசி பஸ்சில்  முன்பதிவு செய்திருந்தனர். இவர்களின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் ஆயுதபூஜை சிறப்பு முன்பதிவை ஏற்கனவே துவங்கியிருந்தது.  முதலில் குறைவான பயணிகளே பயணிப்பதற்கு ஆர்வம் காட்டினர். பிறகு படிப்படியாக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

அவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் படிப்படியாக, தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்லத் துவங்கினர். நேற்று முன்தினம் இரவு முதல்  நேற்று வரையில் அரசு பஸ்களில் பயணிப்பதற்காக 15,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் முன்பதிவு செய்யாமலும் ஏராளமானோர்  நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்து பயணித்தனர். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அரசு விரைவு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை  குறைவாகவே இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பஸ்களில் பயணித்தனர். கூட்ட நெரிசலைக் குறைக்கும்  வகையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் அரசு பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின்  எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கு கொரோனா அச்சத்தால் பலரும் பயணிக்க விரும்பாததே காரணம்.

இதுகுறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆயுதபூஜை ெதாடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு  செல்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட 15,000 பேர் முன்பதிவு செய்தனர்.
அவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பான  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் ஆயுஜபூஜைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நாளை இரவு (ஞாயிறு இரவு) முதல் மீண்டும்  சென்னை திரும்புவார்கள். இவ்வாறு சென்னை வருவதற்கு இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அந்த பயணிகளின்  எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான பயணிகள் வருவார்கள். மேலும் தொடர்ந்து முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க  வாய்ப்புள்ளது. எனவே அதற்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள  வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : SEDC ,Armed Forces Day , 15,000 people booked on SETC buses for outings
× RELATED கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை சீராக இல்லை: ராணுவ தளபதி பேட்டி