லடாக் எல்லைப் பிரச்னையில் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கே!: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: ‘லடாக் எல்லை பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறது அமெரிக்கா. எனினும், பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை’  என்று டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா-  சீனா  இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி  கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இப்பேச்சுவார்த்தையில்  இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும்.

பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும், ராணுவப் பயிற்சிகளிலும், தகவல்கள் பரிமாற்றத்திலும் டிரம்ப் நிர்வாகம் வெளிப்படையான ஆதரவை  வழங்கும். எல்லை தொடர்பான பிரச்னையில் மட்டுமின்றி இந்தியாவுடன் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து நட்புடன் செயல்பட அமெரிக்கா  விரும்புகிறது. இந்தியா - சீனா இடையேயான பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிக்கல்களைப் புரிந்தும் வைத்திருக்கிறோம்.  ஆனாலும், சிக்கல்கள் பெரிதாவதை அமெரிக்கா தவிர்க்கவே நினைக்கிறது. பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா  மேற்கொள்ள விரும்புகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவுக்கு எதிராக 4 நாடுகள் கூட்டணி

‘அண்டை நாடுகளுடன் சீனா எப்போதும் சச்சரவில் ஈடுபட்டு வருகிறது. எல்லைகளை விரிவுபடுத்த முயலும் சீனாவின் நடவடிக்கைகளை சர்வதேச  சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. சமீபகாலமாக, இந்தோ- பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்துக்  கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தன்னை சூப்பர் பவராகக் காட்டிக் கொள்ளவே சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதுகிறோம்.  சீனாவின் இத்தகைய மோசமான நடவடிக்கைகளைத் தடுக்க நான்கு நாடுகள் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளோம்’ என்றும் வெள்ளை  மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து ராணுவ கூட்டுப்பயிற்சிகளை  மேற்கொள்ள உள்ளன. இதையே வெள்ளை மாளிகை அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

Related Stories:

>