×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரமோற்சவம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரமோற்சவம் நேற்று காலை நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, இரவில் பல்வேறு  வாகனங்களில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில்  கல்கி அவதாரத்தில் அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை, கோயிலில் உள்ள ஐயன மண்டபத்தில் தேவி, பூதேவி  சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், பால், தயிர், இளநீர், மஞ்சள்  உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, துளசி மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர், ஐயன மண்டபம் வெளியே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு  பெற்றது. இதில், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தேவஸ்தான அர்ச்சகர்கள் கூறுகையில், ‘வரலாற்றில் முதன் முறையாக 2 பிரமோற்சவங்களும் வீதியுலா இன்றியும், தெப்பக்குளத்தில்  தீர்த்தவாரி நடத்தாமலும், பக்தர்களின்றியும் நடந்து முடிந்தது. விரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து, அடுத்த  பிரமோற்சவத்தின்போது பாரம்பரிய கோலாகலத்துடன் கொண்டாட சுவாமி அருள் புரிய வேண்டும்’ என தெரிவித்தனர்.

சிறிய தொட்டியில்...
வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்படும். ஆனால்,  கொரோனா காரணமாக கோயில் திருக்கல்யாண மண்டபம் பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு எளிமையான முறையில் தீர்த்தவாரி நடந்தது.  

1.88 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 17,577 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 5,791 பக்தர்கள் தலைமுடி காணிக்கை  செலுத்தினர். 1.88 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.



Tags : Navratri Pramorsavam ,Chakratahlvar Tirthavari ,Tirupati Ezhumalayan Temple , Navratri Pramorsavam concludes with Chakratahlvar Tirthavari at Tirupati Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...