விவசாயக் கடன் தள்ளுபடி 10 லட்சம் பேருக்கு வேலை: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் வாக்குறுதி

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள, ‘மகாபந்தன் கூட்டணி’யின் தலைவராகவும், முதல்வர்  வேட்பாளராகவும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இவர் நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, விவசாயத்துக்கான கிசான் கடன் அட்டை கடன்களை தள்ளுபடி செய்வது ஆகிய இரண்டும்  முக்கியமான செயல்திட்டங்களாக இருக்கும்.

* குறைந்தப்பட்ச ஆதார விலையில் விவசாயிகளிடம் தானியங்கள் வாங்கப்படும். உரிய போனசும் வழங்கப்படும்.

* தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதன்மூலம், வேலை வாய்ப்புக்காக பீகார் மக்கள்  வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும்.

* அனைத்து பஞ்சாயத்துக்களிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படும்.

லாலு படம் இல்லை

ராஷ்டிரிய ஜனதா தள தேர்தல் அறிக்கையின் அட்டையில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், மவுலான அபுல் கலாம் ஆசாத், சமூக ஆர்வலர் ராம்  மனோகர் லோகியா, கர்பூரி தாகூர்,  ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இக்கட்சியின்  தலைவரும், தேஜஸ்வியின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவின் படம் இல்லை. தேஜஸ்வி யாதவின் படம் மட்டும் பெரிதாக இடம் பெற்றுள்ளது.

Related Stories: