‘ஜம்மு காஷ்மீரில் ஏற்ற மாட்டோம்’ தேசியக்கொடி பற்றி மெகபூபா சர்ச்சை: கைது செய்யும்படி கோரிக்கை வலுக்கிறது

ஜம்மு: ‘ஜம்மு காஷ்மீரில் இந்திய தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம்,’ என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியிருப்பது, பெரும் சர்ச்சையாகி  இருக்கிறது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்தாண்டு ரத்து செய்தது. இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது  செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் பரூக்கும், உமரும் சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். மெகபூபா முப்தி 14  மாதங்களுக்குப் பிறகு கடந்த 13ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இதுவரையில் எதிரும், புதிருமாக இருந்த  பரூக், உமர் அப்துல்லாவும் மெகபூபாவும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.

370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து போராடி, பழைய காஷ்மீர் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளனர். இது,  ‘உப்கார் பிரகடனம்’ என  அழைக்கப்படுகிறது. இந்நிலையில்,  வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான பிறகு முதன்முறையாக நேற்று முன்தினம் தனது இல்லத்தில்  மெகபூபா பேட்டி அளித்தார். அப்போது, ‘ஜம்மு காஷ்மீரின் கொடியை ஏற்றும் வரையில், வேறு எந்தக் கொடியையும் ஏற்ற மாட்டோம்’ என்று தனது  மேஜை மீது இருந்த இந்திய தேசியக்கொடியை சுட்டிக்காட்டி பேசினார். இது, கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவருக்கு பாஜ உள்ளிட்ட கட்சிகளும்,  அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.

 ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரைனா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கவர்னர் மனோஜ் சின்காவுக்கு கோரிக்கை வைக்கிறோம். மெகபூபாவின்  தேச விரோத பேச்சை, தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அவரை உடனடியாக தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில்  அடைக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே, ஜம்மு காஷ்மீரில் தேசியக்கொடியை தவிர வேறு எந்தக்  கொடியையும் ஏற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம்,’’ என்றார்.

துர்கை கோயிலில் பரூக் வழிபாடு

ஜம்மு காஷ்மீரின் சுங்கச்சாவடி பகுதியில் துர்கை நாக் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்  700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஜம்மு காஷ்மீர்  முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா,  துர்காஷ்டமியை முன்னிட்டு நேற்று இந்த கோயிலுக்கு கட்சி தொண்டர்களுடன் வந்து பார்வையிட்டு,  வணங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘இந்த நாள் இந்து சகோதர, சகோதரிகளுக்கு மிக முக்கியமானது. மத விழாக்கள் கொண்டாடப்படும் இந்த  நாளில் அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தேன். இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என  பிரார்த்திக்கிறேன்,’’ என்றார்.

Related Stories: