கேரள அரசு பஸ்களில் கட்டணத்தை குறைக்க முடிவு

திருவனந்தபுரம்: பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் கேரள அரசு பஸ்களில் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா காலத்துக்கு பின்னர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 கி.மீக்கு ரூ.8 ஆக இருந்தது. இந்த தூரம் 2.50 கி.மீ ஆக குறைக்கப்பட்டது. மேலும் 5 கி.மீ பயணத்துக்கான கட்டணம் ₹8ல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டது. இதுபோல நீண்டதூர பஸ்களில் 25 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குறிப்பாக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பஸ்களில் பாதி ஆட்கள் கூட இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் குறைந்து கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் கொரோனாவுக்கு முந்தைய கட்டணத்தை வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சூப்பர் பாஸ்ட் லெவலுக்கு மேலுள்ள சூப்பர் கிளாஸ், சூப்பர் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஏர்-எக்ஸ்பிரஸ், ஸ்கானியா, ஹை-டெக், சூப்பர் டீலக்ஸ், வால்வோ, தாழ்தள சொகுசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்படுகிறது. டவுன் மற்றும் சாதாரண பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் சாதாரண மற்றும் சூப்பர் பாஸ்ட் பஸ்களிலும் கட்டணம் குறைப்பு அமல்படுத்தப்படும் என கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிஜூ பிரபாகர் கூறினார்.

Related Stories:

>