பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள் செய்வதை பொதுமக்கள் தாமதம் செய்ய வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை  : சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காலகட்டத்தில் கொரோனா அல்லாத சேவைகளும் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும், ஸிஜிறிசிஸி பரிசோதனைகள் முழு வீச்சில் நடத்தி வருவதாலும் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வினை செய்து பருவதாலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும் தமிழகத்தின் மருத்துவத்துறையின் தரத்தை அறிந்தே ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

மேலும், பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தற்போது காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் நடமாடுவதை காண முடிகிறது எனவும் தெரிவித்த அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதே இறப்பு எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக உள்ளது எனவும் கூறினார்.

குறிப்பாக நேற்றைய தினம் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற அவர், தொற்று 50% குறைந்துள்ள நிலையில் இதேபோன்ற ஒத்துழைப்பு பொதுமக்களிடமிருந்து கிடைத்தால் கொரோனா தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் இது பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள் செய்வதை பொதுமக்கள் தாமதம் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப் படுகிறது எனவும் இது தவிர தனியார் பரிசோதனை மையங்களில் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அவர்கள் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும், மத்திய அரசால் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை 7.5% உள் ஒதுக்கீடு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக முதல்வர் அதிகார பூர்வமாக அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories:

More