×

திருமாவளவன் பேசியதைத் திரித்து, வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது : மு.க.ஸ்டாலின் தாக்கு!!

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான - வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது.

தொல்.திருமாவளவன் அவர்கள், ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காலம் காலமாக என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்களோ, அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிறார். மக்கள்தொகையில் சரிபாதியாகவும் - அதற்கும் கூடுதலாகவும் உள்ள பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன – வருணாசிரம - மனுஸ்மிருதிகளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.

இதைத்தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தனர். அதுகுறித்து, திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக வெட்டி - சமூகவலைதளங்களில் பரப்பி, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட நினைக்கும் மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு நேர்மாறாக தோழர் திருமாவளவன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.

தி.மு.க. கூட்டணிக்குள் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என வாய் பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது. பெண்களுக்கான உரிமைகளைப் போற்றி  நிலைநாட்டுவதில், தி.மு.கழக அரசு செய்த சாதனைகளைப் போல, எந்த அரசும் - இயக்கமும் செய்ததில்லை.  பெரியார் - அம்பேத்கர் கனவுகளை நனவாக்கும் வகையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில்,  பெண்களுக்கான சொத்துரிமை முதல், கல்வியுரிமை-வேலைவாய்ப்பு உரிமை என அனைத்தும் ஆண்களுக்கு நிகராக வழங்கப்பட்டது.

‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ எனும் மகாகவி பாரதியின் வரிகள் செயல்வடிவம் பெற்றன. இவற்றை அறியாதோர், வரலாறு தெரியாமல் மனம்போனபடி உளறுவதையும், உள்நோக்கத்துடன் செயல்படுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க, எந்தப் பிரிவினரையும் விலக்கி வைக்காமல், அனைத்துத் தரப்பு  மக்களையும் அரவணைத்து, அனைவருடைய உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் அல்லும் பகலும் அயராமல் பாடுபடும்  பேரியக்கம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thirumavalavan ,fanatics ,attack ,MK Stalin , Thirumavalavan, Violence, MK Stalin, Attack
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு