×

இடி தாக்கி வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம் : பக்தர்கள் அதிர்ச்சி

செய்யாறு, :செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் இடி தாக்கியதால் சேதமானது. பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக பரிகார பூஜை செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்தூர் பகுதியில் உள்ளது பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில். இக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இங்குள்ள ஆண் பனை, பெண் பனையாக மாறி, குலை ஈன்ற வரலாற்று சிறப்பு மிக்கது இக்கோயில். 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூலை மாதம் பாலாலயம் உருவாக்கப்பட்டு, ₹82 லட்சம் செலவில் கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக ராஜகோபுரத்தில் சாரங்கள் கட்டப்பட்டு வர்ணம் பூச ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் செய்யாறு உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. செய்யாறில் நேற்றிரவு 11 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் ராஜகோபுரத்தின் வடமேற்கு பகுதி மேற்புறம் ஒரு பகுதி இடிந்தது. அங்கு அமைக்கப்பட்ட யாழி சிற்பத்தின் தலைப்பகுதி இடிந்து விழுந்தது. மேலும் மின்சாதன பொருட்களும் சேதமாகி அனைத்து மின்விளக்குகளும் அணைந்தது.

இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு வந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் கீழே கிடந்த யாழி சிற்பத்தின் மண் துகள்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோயில் நிர்வாகத்தினர் ஸ்தபதியுடன் அங்கு வந்து சிற்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாழி சிற்பம் சேதமானதால் ஹோமம் நடத்தி சிவாச்சாரியார்கள் பரிகார பூஜை செய்தனர்.பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் கோபுரத்தில் ஏற்பட்ட சேதம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Vedapuriswarar temple ,Devotees , Thunder, Vedapuriswarar, Temple, Rajagopuram
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...