×

பீகாருக்கு இலவச தடுப்பூசி வாக்குறுதி அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டது தப்பு! :பாஜக மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்

மும்பை, :பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிதி அமைச்சர் வெளியிட்டது தவறு என்றும், இது மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டபேரவைக்கு வருகிற 28ம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் வெளியிட்டார். அதில், ‘பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.  ஐ.சி.எம்.ஆரிடமிருந்து ஒப்புதல் பெற்ற உடனேயே நடைமுறைப்படுத்தப்படும்’ என்று அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் பாஜக மக்களிடம் வாக்குகளை கோரி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன. மறுபுறம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாகேத் கோகலே என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘பீகார் தேர்தல் விஷயத்தில் மத்திய அரசு தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தடுப்பூசி இலவச அறிவிப்பானது  பாரபட்சமானது. மத்திய அரசு தனது  அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறது. இந்த அறிவிப்பை எந்த பாஜக தலைவரும் வெளியிடவில்லை. ஆனால் நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார் என்பதை தேர்தல் ஆணையம் அறிய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில் பீகாருக்கு இலவச தடுப்பூசி என்று கூறியிருப்பதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Finance Minister ,Bihar ,BJP , Bihar, free vaccine, promise, BJP
× RELATED அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்...