×

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா? : பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்

டெல்லி : இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்று அறிவிப்பதா என, பாஜக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 24) வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது; அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.

இதில், கணக்கர்கள், எழுத்தர்கள், கணிணிப் பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் என 13 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஒரு தேதியைக் குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடு ஆகும்.

இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். வழக்கமாக மத்திய அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில், முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும். அதற்கு இந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றார்கள்.

இந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, வெளிப்படையாகவே அறிவித்து இருக்கின்றார்கள்.

இந்த அறிவிப்பின் பத்தாம் பக்கத்தில், பாரா 18 இல், கணக்காளர், எழுத்தர்கள், கணினிப் பதிவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் 40 மதிப்பெண்கள் இந்தித் தேர்வு எழுத வேண்டும். பன்னோக்குப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். செவிலியர்கள் 10 மதிப்பெண் பெற்றாக வேண்டும்.

அதாவது, எனவே, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை; வேலைவாய்ப்பும் கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.

இத்தகைய அறிவிப்பை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : government ,BJP ,Vaiko , Hindi, work, no, BJP government, Vaiko, condemnation
× RELATED பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி...