×

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

மதுரை: செங்குன்றத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி இறந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று மதுரை அருகே பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 5 பெண்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அறைகள் தரைமட்டமாயின. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சண்முகராஜ் நடத்தி வருகிறார். ஆலையில் நேற்று 37 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பிற்பகல் திடீரென பட்டாசு உற்பத்தி செய்யும் அறை, பயங்கர சத்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. இதில் அருகிலுள்ள 2 அறைகளின் மேற்கூரைகளும் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே காடனேரியை சேர்ந்த கருப்பையா மனைவி அய்யம்மாள் (65),முருகேசன் மனைவி வேல்தாய் (45), பாண்டி மனைவி லெட்சுமி (40), சுந்தரம் மனைவி காளீஸ்வரி (35), விருதுநகர் மாவட்டம், கோவிந்தநல்லூரை சேர்ந்த பாண்டி மனைவி சுருளியம்மாள் (55) ஆகியோர் பலியாயினர்.

மேலும் பெருமாள் மகள் லெட்சுமி (45), முத்துச்சாமி மனைவி மகாலட்சுமி (50), சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த 5 பெண்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. ராஜேந்திரன், எஸ்.பி. சுஜித்குமார், ஆர்டிஓ ராஜ்குமார் ஆகியோர்சென்று விசாரணை நடத்தினர். வெடிமருந்துகள் உராய்வின்போது வெடி விபத்து நடந்திருக்கலாம் எனத்தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் இரங்கல்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்த அய்யம்மாள்,வேல்தாய், லெட்சுமி, காளீஸ்வரி, சுருளியம்மாள் ஆகிய 5 குடும்பத்தினருக்கும் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த குடும்பத்துக்கு 1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Tags : explosion ,firecracker factory ,Madurai , Virudhunagar, Fireworks Factory, Fireworks
× RELATED பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!!