பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

பொன்னேரி:  பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்தவர் சரவணன்(36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதிக்கு தியாஸ், தர்ஷினி என்ற மகன் மகள் உள்ளனர். இவர், குடும்பத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் இருந்து இடம் மாறி பொன்னேரி என்ஜிஒ நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் திருவொற்றியூருக்கு  ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக  பொன்னேரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை திருவொற்றியூருக்கு சென்றுவிட்டு பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் அடுத்த இலவம்பேடு என்ற இடத்தில் சென்றபோது காரில் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல் சரவணனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்ட வந்தனர். அதனைப்பார்த்த சரவணன், பைக்கை சாலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி கன்டெய்னர் யார்டு கம்பெனியில் நுழைந்தார்.

ஆள் நடமாட்டம் இல்லாததால் அவரை மர்ம நபர்கள் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி  சரவணன் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>