×

முதல்வர் தனது அருகதையை நிரூபிக்க இன்றே 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காததை அடுத்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினேன். அதற்கு பதிலளித்த ஆளுநர் நான்கு வார காலம் ஆகும் என்றார். ஏற்கனவே நான்கு வாரம் ஆன நிலையில், இன்னும் நான்கு வாரம் என்பது அதிகம் என்பதால், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. இதை அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்று முதல்வர் எடப்பாடி சொல்கிறார். அரசியல் ஆதாயம் தேடுவதற்கு, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மசோதாவை மேலும் தாமதம் செய்யாமல் நிறைவேற்று என்றா சொல்வார்கள். இந்த குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதல்வருக்கு இல்லாமல் போய்விட்டது? இது எந்தவித அரசியல் ஆதாயத்துக்காகவும் அல்ல.

இந்தப் பிரச்சினையில், எங்களுடைய கண்ணுக்குத் தெரிவது, அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனே அன்றி, அதில் அரசியல் என்பது அறியாமை.  கொரோனாவை கட்டுப்படுத்தியதால் பழனிசாமிக்குத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளதாம். அதனைப் பார்த்து நான் காழ்ப்புணர்ச்சி அடைந்துள்ளேனாம். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களது கோபத்துக்கும் ஆளாகி, மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார் பழனிசாமி. இதனை மறைத்து, நற்பெயர் என்று அவர் சொல்லிக் கொள்வது, உப்புக் கல்லை வைரம் என்று சொல்லும் பேதைமை.  தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது, பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிறகுதான் என்பதை ஏனோ மறந்துவிட்டு, நீட் தேர்வு குறித்து என்னென்னவோ சம்பந்தமில்லாதவற்றை கூறியிருக்கிறார். மேலும் அருகதையைப் பற்றி, தனது அறிக்கையில் அளந்து விட்டிருக்கிறார். இவர் தன்னுடைய அருகதையை, யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், இன்றே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Governor ,MK Stalin , Let the Chief Minister get the Governor's approval for the 7.5 per cent reservation today to prove his proximity: MK Stalin's statement
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...