×

ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 8ம் நாள் குதிரை வாகனத்தில் மலையப்பர் அருள்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சத்தின் 8ம் நாளான நேற்று இரவு, கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 8ம் நாளான நேற்று காலை, தங்கத் தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டது.  இதனால், தங்கத் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கல்யாண மண்டபத்தில் சர்வ பூபால வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பிரமோற்சவத்தின் 4ம் நாளன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

ஆனால், இந்தாண்டு தங்கத் தேரோட்டம் ரத்து என்பதால் ஆகம முறைப்படி சர்வ பூபால வாகன சேவை நடத்தப்பட்டது. அண்டமும் நானே, சர்வமும் நானே என்பதை பறைசாற்றும் வகையில் இந்த தரிசனம் நடந்தது.
தொடர்ந்து நேற்று இரவு கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதாவது, கலியுக துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது அவர் காட்சி தருவதாக ஐதீகம்.

இன்றுடன் நிறைவு
பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை 6 மணியளவில் கோயிலில் உள்ள ஐயன மண்டபம் அருகே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

17,752 பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 17,752 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 5,869 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 1.33 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.



Tags : Ezhumalayan Temple Pramorsavam ,Malayappar Arul , Malayappar Arul in a horse carriage on the 8th day of Ezhumalayan Temple Pramorsavam
× RELATED ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 6ம்...