திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் கபில்தேவ்

புதுடெல்லி: கிரிக்கெட் உலக ஜாம்பவான் கபில்தேவ்  திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர், இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் கபில்தேவ் (61). அரியானாவை சேர்ந்த  கபில், குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் நேற்று அதிகாலை டெல்லி ஓக்லா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அப்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதயவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அதுல் மாத்தூர் தலைமையில் உடனடியாக கபில்தேவுக்கு ‘கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி’ செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஆஞ்சியோ செய்யப்பட்ட பிறகு கபில்தேவ் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமான கபில் 1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மொத்தம் 131 டெஸ்ட்களில் விளையாடி 5248 ரன், 434 விக்கெட்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக டெஸ்டில் 163 ரன்னும், ஒருநாள் போட்டியில் 175* ரன்னும் எடுத்துள்ளார். மேலும், 253 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3783 ரன் மற்றும் 175விக்கெட் எடுத்துள்ளார்.

உள்நாட்டு போட்டிகளில்  16,873 ரன் எடுத்ததுடன், 1270 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1983ல் உலக கோப்பையை வென்றதன் மூலம் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தவர். கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின், சேவக், கோஹ்லி, கம்பீர், கும்ப்ளே, ரெய்னா, கைப், மதன்லால், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர், பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா உட்பட பலரும் ட்விட்டரில் தகவல் பதிந்துள்ளனர்.

Related Stories:

>