×

உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நடிகர் கவுண்டமணி பற்றி யூ-டியூப் சேனலில் அவதூறு பதிவு: கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சென்னை: உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவதூறு செய்தி பரப்பிய இரண்டு யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சசிகுமார் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். 82 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். காலையில் அதிர்ச்சி தரும் அழைப்பு ஒன்று வந்தது. அதில் யூ-டியூப் சேனலான ‘தமிழ் சினி மற்றும் தமிழ் 360’ என்ற இரண்டு யூ-டியூப் சேனலில் எனது உடல்நிலை கடுமையாக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதாக கூறினர்.

அதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் தவறான செய்தி. நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன். இதுபோன்ற தவறான மற்றும் அவதூறான செய்திகளால் நானும் எனது குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்பிய ‘தமிழ் சினி மற்றும் தமிழ் 360’ யூ-டியூப் சேனல்களை தடை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொய் செய்தியை சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனலில் இருந்து நீக்க வேண்டும்.



Tags : Countamani ,commissioner , YouTube channel slams actor Countamani for health problems
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...