×

மாலத்தீவு, மொரீஷியஸ் நாட்டை தொடர்ந்து தனி விமானத்தில் ஓபிஎஸ் மகன் பிரான்ஸ் பயணம்

சென்னை: மாலத்தீவு, மொரீஷியஸ் நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், தற்போது பிரான்ஸ் சென்றுள்ளார். அவரது பயணத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடுவது, வழிகாட்டு குழு அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் செயற்குழு கூடி விவாதித்தது. அதில் முடிவு எடுக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திரண்டனர். இதற்கு அவரது மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமாரும் ஆதரவாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் 2 நாட்களாக இரவு, பகலாக ஆலோசனை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து கடந்த 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

 இந்தநிலையில், கடந்த 11ம் தேதி துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமார், தனி விமானத்தில் மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் நண்பர்கள், சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், விஜயானந்த் விநாயகமூர்த்தி, ஆறுமுக நயினார் ஆகிய 4 பேரும் சென்றனர். இவர்கள், மாலத்தீவில் இருந்து மொரீஷியஸ் நாட்டுக்குச் சென்றனர். இவர்கள் இன்பச்சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. விமானதுறையிடம் தனி விமானத்தில் செல்ல அனுமதி பெற்றிருந்தாலும், எம்பி என்ற முறையில் மத்திய அரசின் அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் மகனின் பயணம் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் சரவணன் பழனியப்பனின் தொழில் மற்றும் அவரது தொடர்புகள் குறித்து ஏராளமான புகார்கள் மத்திய அரசுக்கு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவருடன் ரவீந்திரநாத்துக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் என்ன வகையான தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மத்திய அரசு அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு தனி விமானத்தில் அவர்கள் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களுக்கும் இன்பச்சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பல தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரவீந்திரநாத்துடன் சென்றுள்ள சிலர், பினாமி சொத்துக்களை முதலீடு செய்வதில் கில்லாடிகள் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரவீந்திரநாத்குமாரின் பயணம் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்

Tags : OBS ,France ,Mauritius ,Maldives , OBS son travels to France on private plane following Maldives, Mauritius
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்