×

7.5% இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: கவர்னர் ஒப்புதல் வழங்குவார் முதல்வர் எடப்பாடி நம்பிக்கை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைப்பதில்லை. எனவேதான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, கடந்த 21.3.2020 அன்று சட்டப்பேரவையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன்.

 இது சம்பந்தமாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் ஒன்றினை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் பெற்று, 7.5%உள்ஒதுக்கீடு  மசோதா  சட்டமன்றத்தில் ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக 18.9.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதுள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதால், ஏழை எளிய மாணவர்களுக்கு சம நீதி வழங்க வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கவர்னர் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். உள்ஒதுக்கீட்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென அமைச்சர்கள் குழு, கவர்னரை கடந்த 20ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது, இதுகுறித்து ஆய்வு செய்து விரைவாக முடிவு செய்வதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார்.

Tags : Edappadi ,governor , 7.5% reservation bill issue: Chief Minister Edappadi hopes the governor will approve
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்