ஆளுநரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் த.பெ.திராவிடர் கழகத்தினர் கைது

சென்னை: மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக ஆளுநரை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் ைகது செய்தனர். மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை கிண்டியில் உள்ள வேளச்சேரி நெடுஞ்சாலையில் நடந்தது. போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆளுநருக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 50க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கிண்டி மற்றும் அண்ணா சாலை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட தலைவர் குமரன் உட்பட 50க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.  பின்னர் சமுதாய நல கூடத்தில் அடைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>