×

சட்டப்பேரவை தேர்தல் குறித்து தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை: வெற்றிவாய்ப்பு குறித்து கருத்து கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தொடர்பாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனையின் போது தொகுதியில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, மக்களிடம் திமுகவுக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது. யாரை வேட்பாளாக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், தொகுதி கள நிலவரம் என்ன, தொகுதியில் நீண்ட காலமாக உள்ள பிரச்னை என்ன, மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது. அதிமுக அரசை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துகளை கேட்டறிந்தார்.

மேலும் தேர்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மக்களிடம் நேரில் சென்று எடுத்துரைக்க வேண்டும். அதிமுக அரசின் மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்கள் குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மாலையில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


Tags : DMK ,MK Stalin ,executives ,election ,region ,victory , Legislator consults with DMK executives in southern region on elections: DMK leader MK Stalin seeks feedback on chances of victory
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்