×

7.5% உள்ஒதுக்கீடு மசோதா விவகாரம்: கவர்னருக்கு நெருக்கடி முற்றுகிறது: அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்துவதால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக கவர்னருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய அரசு மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை அமல்படுத்திய பிறகு, அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பது எட்டாக்கனியாகிவிட்டது. மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலைதான் உள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறும் நிலை தற்போது உருவாகியுள்ளது. பள்ளிகளில் சுமாராக படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சீட் பெறும் நிலை உருவாகிவிட்டது.

அதோடு, நகரங்களிலும், கிராமங்களிலும் நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டர்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டி, ஓராண்டு படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.  கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் கோச்சிங் சென்டர்களில் படிக்கும் வசதி வாய்ப்புகள் இல்லை. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மருத்துவராக வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் கனவு முழுமையாக தகர்ந்து விட்டது. இதனால் பலர் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே 13 மாணவர்கள் பயத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

 அதைத் தொடர்ந்து கடந்த சட்டப்பேரவையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு செப்டம்பர் 16ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 39 நாட்களாக தமிழக கவர்னர் மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். அதேநேரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், கவர்னர் முடிவு எடுத்த பிறகுதான், கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் வருகிற 29ம் தேதிக்குள், பதில் மனு தாக்கல் செய்யும்படி கவர்னரின் செயலாளரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், தமிழக அமைச்சர்கள் 5 பேர் சென்று கவர்னரை சந்தித்துப் பேசினர். பின்னர், நிருபர்களிடம் பேசிய அமைச்சர்கள், ‘‘விரைவில் நல்ல முடிவு வரும்’’ என்று தெரிவித்தனர். அதேநேரத்தில், கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவில் அமல்படுத்தப்பட்ட கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், தற்போதைய தேர்வில் வென்ற 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் சீட் கிடைக்கும்.  இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதினார். அதில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் எழுதிய கவர்னர், இந்த மசோதா மீது 3, 4 வாரத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கால அவகாசம் குறித்து அமைச்சர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கவர்னர் கூறியிருந்தார். இதனால் அமைச்சர்கள் கவர்னர் கூறிய தகவல்களை மறைத்து விட்டதாக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
 இதற்கிடையில், தமிழக கவர்னர் காலம் தாழ்த்துவது குறித்து கவர்னர் மாளிகை முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளது. இதனால் தினமும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டனர்.  ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு வருகிற 29ம் தேதி வருகிறது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அதற்கு விளக்கம் அளிப்பதற்காக அமைச்சர்கள் தினமும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் வருகிற 29ம் தேதிக்குள் கவர்னர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லது 29ம் தேதி நீதிமன்றத்தில், கவர்னரின் செயலாளர் முடிவை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

* மத்திய அரசு மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை அமல்படுத்திய பிறகு, அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பது எட்டாக்கனியாகிவிட்டது.
* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
* பேரவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்  கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.



Tags : governor ,Crisis , 7.5% quota bill issue: Crisis ends for governor: All opposition parties are in a dilemma as they struggle.
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...