×

குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா'திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லி, :குஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை அக்டோபர் 24 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். குஜராத் விவசாயிகளுக்காக கிசான் சூர்யோதய் யோஜனாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார். யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கிர்னாரில் கயிற்றுப்பாதையையும் அவர் திறந்து வைக்கிறார்.

கிசான் சூர்யோதய் யோஜனா

பாசனத்துக்கு பகல் வேளைகளில் மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, முதல்வர் திரு விஜய் ருபானி தலைமையிலான குஜராத் அரசு கிசான் சூர்யோதய் யோஜனாவை சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ 3,500 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மொத்தம் 3490 சர்க்யூட் கிலோமீட்டர்களுக்கு 66-கிலோவாட் மின் விநியோக வடங்களும், 220 கேவி துணை மின் நிலையங்களும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.2020-21-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் தாஹோட், பதான், மகிசாகர், பஞ்சமகால், சோட்டா  உதேப்பூர், கேடா, தாபி, வல்சத், ஆனந்த் மற்றும் கிர்-சோம்நாத் ஆகியவை இணைக்கப்படும். 2020-23-க்குள் படிப்படியாக இதர மாவட்டங்கள் இணைக்கப்படும்.

யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனை  

யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதன் மூலம் இருதய சிகிச்சைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மாறும். மேலும், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்ட உலகின் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அது உருவாகும்.
ரூ 470 கோடி செலவில் யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் நிறைவடையும் போது, படுக்கைகளின் எண்ணிக்கை 450-இல் இருந்து 1251 ஆக அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் உருவாகும்.
நில நடுக்கத்தை தாங்கும் வலிமையுடனும், நெருப்பை எதிர்த்து போராடும் ஹைட்ரண்ட் அமைப்பு மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய இந்தியாவின் முதல் நடமாடும் முன்னேறிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு இந்த மையத்தில் இருக்கிறது. சுவாசக் கருவிகள், ஐஏபிப்பி, ஹீமோடையாலிசிஸ், எக்மோ உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. 14 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 7 இருதய காத்தெடரைசேஷன் ஆய்வகங்கள் இந்த நிறுவனத்தில் தொடங்கப்படும்.

கிர்னார் கயிற்றுப்பாதை

2020 அக்டோபர் 24 அன்று கிர்னாரில் கயிற்றுப்பாதையை (ரோப்வே) பிரதமர் திறந்து வைப்பதன் மூலம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் கிர்னார் மீண்டும் முக்கியத்துவம் பெறும். தொடக்கத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்களுக்கான கொள்ளளவுடன் 25-30 பெட்டிகள் இருக்கும். இதன் மூலம் 2.3 கிமீ தூரத்தை வெறும் 7.5 நிமிடங்களில் அடைய முடியும். கிர்னார் மலையை சுற்றியுள்ள பசுமையான அழகை இந்த கயிற்றுப்பாதையில் செல்வதன் மூலம் காண முடியும்.

Tags : Modi ,Kisan Suryoday Yojana ,Gujarat , Gujarat, Farmers, Kisan Suryoday Yojana, Project, Prime Minister Modi
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...