கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு-வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மாட்டு சந்தைக்கு கடந்த வாரத்தை விட கூடுதலாக மாடுகள் வரத்தானதால், வெளிமாநில வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு க ருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, கரூர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாட்டு சந்தை, கடந்த 3 வாரங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், 4வது வாரமாக நேற்று நடந்த மாட்டு சந்தையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத் துவங்கியது. இதில், கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து சற்று அதிகரித்தால், வெளிமாநில வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து, மாடுகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில்,‘இந்த வாரம் கூடிய சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பசு 300, எருமை 120, கன்று 60 என 480 மாடுகள் வரத்தானது. இதில், கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை விலை போனது.

கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. மாடுகளை வாங்க தமிழக வியாபாரிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை வியாபாரிகள் கடந்த வாரத்தை போலவே வந்திருந்தனர். வரத்தான மாடுகள் 75 சதவீதம் விற்பனையானது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும்’ என்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை: சந்தைக்கு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நுழைவு வாயிலிலேயே மேற்கொள்ளப்பட்டது. சளி, காய்ச்சல் இருந்தால் மாட்டு சந்தைக்குள் அனுமதிக்கவில்லை.

மேலும், முக கவசத்தை மாட்டு சந்தைக்குள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சந்தை நிர்வாகிகள் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

Related Stories:

>