×

நிலத்தில் குழி தோண்டியபோது 5 ஐம்பொன் சாமி சிலைகள் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

பட்டுக்கோட்டை : நிலத்தில் குழி தோண்டியபோது 5 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி லெனின் (64). அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ள லெனினுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று கொய்யாக்கன்று நடுவதற்காக மண்வெட்டியால் குழிகள் தோண்டப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் ஒரு அடிக்கு குழி தோண்டியபோது சத்தம் வந்தது.

அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் முறையே 4, 5, 6 இன்ச் 3 விஷ்ணு சிலைகள், 4 இன்ச் பெருமாள் சிலை, 3இன்ச் ஆழ்வார் சிலை என மொத்தம் 5 சாமி சிலைகள், 4 களையங்கள், 5 கிண்ணங்கள், ஒரு தட்டு, 4எடை குண்டுகள், பானை ஓடு ஒன்று, உலோகம் உரசி பார்க்கும் கல் ஒன்று, கெண்டி பொருட்கள் 6என 27 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தருக்கு, விவசாயி லெனின் தகவல் தெரிவித்தார். தாசில்தார் தரணிகா, வருவாய் ஆய்வாளர் உமையாம்பிகை, அத்திவெட்டிமேற்கு கிராம நிர்வாக அலுவலர் கோகுல் மற்றும் மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை பார்வையிட்டனர். கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், சாமிசிலைகள் உள்பட 27 பழங்கால பொருட்களையும் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். முன்னதாக கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி மக்கள் பார்த்ததுடன் பூக்கள் தூவி தரிசனம் செய்தனர். கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் அனைத்தையும் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர். அதன்பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி லெனின் கூறுகையில், அத்திவெட்டி கிராமத்தை சுற்றிலும் கீழடியை போல் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். தமிழர்களின் தொன்மையை, நாகரீகத்தை உலகுக்கு தெரியப்படுத்த ஆராய்ச்சி செய்ய வேண்டும். கீழடியை பொறுத்தவரை மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பேராவூரணி அருகே உள்ள கட்டையங்காடு உக்கடை கிராமத்தில் சமீபத்தில் ஏரி தூர்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆராய்ச்சி நடத்த வேண்டும். அதன்மூலம் தமிழர்களின் தொன்மை, நாகரீகத்தை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

Tags : ground ,iPhone Sami ,pit , Pattukottai: 5 Iphone Sami idols were found while digging a hole in the ground.
× RELATED புதுக்கோட்டையில் 10ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் தணிக்கை