×

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் பட்டய கிளப்புது செங்கல் உற்பத்தி...சாதா கற்களுக்கு கடும் கிராக்கி

அந்தியூர் : கொரோனா ஊடரங்கு தளர்வுக்கு பிறகு அந்தியூரில் செங்கல் விற்பனை சூடுபிடித்துள்ளது. சேம்பர் செங்கல்லை விட சாதா சூலை கற்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக செங்கல் உற்பத்தி செய்யும் தொழில் அதிகமாக நடந்து வருகிறது. அந்தியூரில் தோப்பூர், முனியப்பம்பாளையம், நகலூர், சின்னத்தம்பிபாளையம், மஞ்சாளநாய்க்கனூர், பிரம்மதேசம், போக நாயக்கனூர், நல்லா நாயக்கனூர், ஆப்பக்கூடல், கேத்த நாயக்கனூர், புன்னம், சங்கராப்பாளையம், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் ேமற்பட்ட சாதா செங்கல் சூளைகளும், 10க்கும் மேற்பட்ட சேம்பர் செங்கல் சூளைகளும் இயங்கி வருகின்றன.

சாதா செங்கல் சூளைகளில் கைகளால் செங்கல் தயார் செய்து காய வைத்து அடுக்கி விறகுகளை கொண்டு எரித்து கற்களை தயார் செய்கின்றனர். இந்தக் கற்கள் சேம்பர் செங்கற்களை விட அதிகமாக வேக வைப்பதால் நிலைப்புத்தன்மை அதிகம். சேம்பர் செங்கல், சாதா செங்கல்லை விட விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால், சேம்பர் செங்கல் ஒரே தரமாக, பிசிறில்லாமல் தயாரிக்கப்பட்டு பெரிய சேம்பர்களில் சீராக வேக வைக்கப்படும்.
அந்தியூர் பகுதியில் உற்பத்தியாகும் சாதா கற்கள் சூளைகளிலேயே ரூ.5 முதல் ரூ.5.70 வரையிலும், சேம்பர் செங்கல் ரூ.6 முதல் ரூ.6.50 வரை விற்கப்படுகிறது.

இதுதவிர, தனியாக செங்கல் ஏற்றி இறக்கும் கூலி ஒரு ரூபாயிலிருந்து, அவை கொண்டு செல்லும் தூரத்திற்கு ஏற்ப வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்தாண்டு செங்கல் விற்பனை சுமாராக இருந்து வந்த நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு செங்கல் உற்பத்தியும், விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் பெரும்பாலும் மானாவாரி நிலங்களாக உள்ளன. இதனால், செங்கல் தயாரிப்பிற்கு தேவைப்படும் தரமான மண் எளிதில் கிடைப்பதால் இங்கு செங்கல் தயாரிப்பு அதிகமாக நடந்து வருகிறது. தாராபுரம், பல்லடம் பகுதிகளில் இயந்திரங்களை கொண்டு செங்கல் தயார் செய்வதால் அங்கு ஆட்கள் பற்றாக்குறை இல்லை.

ஆனால், அந்தியூர் பகுதிகளில் ஆட்களை வைத்து செங்கல் தயார் செய்வதால் ஆட்கள் பற்றாக்குறை பரவலாக இருந்து வருகிறது. இங்கு கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தொப்பூர், மேச்சேரி, மேட்டூர், திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலையாட்கள் இங்கு வந்து குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு முன் பணம் வழங்கி, செங்கல் சூளை உரிமையாளர்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்து தங்க வைத்துள்ளனர்.
இத்தொழிலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத்தைக் காட்டிலும் இங்கு செங்கல் உற்பத்தி நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் கோபி, ஈரோடு, திருப்பூர், அவிநாசி, கோவை, சத்தியமங்கலம், பவானி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்தியூர் செங்கல்லுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

செங்கல் தயாரிக்கும் இடத்திலேயே வேக வைத்த செங்கல், சூளைகளிலிருந்து கீழே இறங்குவதற்குள்  விற்பனையாகி விடுகிறது. தற்போது மழை காலம் துவங்கி உள்ளதால் செங்கல்லை காய வைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த நேரத்தில் ெசங்கல் உற்பத்தி குறைந்துவிடும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Sada , Anthiyur: Brick sales are heating up in Anthiyur after the Corona riots eased.
× RELATED “பாஜவில் சேராவிட்டால் கைது” டெல்லி...